ஆளுநர் பதவி விலக கோரி கலெக்டர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. அப்போது, ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லிபாபு உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட மேடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: இந்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதி போல் செயல்படக்கூடாது. ஆளுநர் ரவியை வேஷம் கட்டி ஆட சொல்லி இருக்கிறார். அவரின் வேஷம் நேற்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிறந்த முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலினுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டும், எதிர் கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசால் ரவி அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு எந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளதோ, அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார். ஆர்எஸ்எஸ் குழு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அது வெற்றி பெறவில்லை. அதனால், ஆளுநர் அதை திரும்ப பெற்று இருக்கிறார். ஈரோடு எங்கள் தொகுதி. மீண்டும் காங்கிரஸ் கட்சிதான் நிற்கும். திமுக,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஈரோடு தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கேட்டு மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இன்று (நேற்று) மாலை ஆதரவு கேட்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: