தை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு: தை பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இன்று தை மாத பிரதோஷமாகும். வரும் சனிக்கிழமை தை அமாவாசையாகும். இதையொட்டி இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று தை பிரதோஷத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணி முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். விருதுநகர், மதுரை, உள்ளிட்ட ஊர்களில் இருந்தும், சென்னை, கோவை உள்ளிட்ட தொலைதூர ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இந்நிலையில் காலை 6.50 மணியளவில் தாணிப்பாறை வனத்துறை கேட் திறந்துவிடப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அலங்காரத்துக்கு பின் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் தை அமாவாசை என்பதால் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories: