பிரபல வீராங்கனைகள் பகீர் குற்றச்சாட்டு மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாஜ எம்பி பாலியல் தொல்லை: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக வினேஷ் போகட், சாக்சி மாலிக் உள்ளிட்ட பிரபல வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்து 3வது முறையாக பிரிஜ் பூஷண் சரண் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாஜ எம்பி ஆவார்.

இந்நிலையில், கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக நாட்டின் பிரபல மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று 4 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவரும் ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகட், டோக்கியோ ஒலிம்பிக்சில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, ரியோ ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வினேஷ் போகட் கூறியதாவது: லக்னோவில் உள்ள தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பல பயிற்சியாளர்கள் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். முகாமில் உள்ள சில பெண்கள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சார்பாக வீராங்கனைகளை அணுகி பேசி உள்ளனர். கூட்டமைப்பின் தலைவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக என்னிடம் 12 வீராங்கனைகள் கூறி உள்ளனர். அவர்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேர்ந்தால் அவர்களிடம் பெயர்களை தெரிவிப்பேன். பாலியல் சீண்டல்களை நான் சந்தித்ததில்லை. ஆனால், கூட்டமைப்பில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என கூறியதால் கூட்டமைப்பின் தலைவருக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலம் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து பாஜ எம்பி பூஷணை நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: