ரஷ்யா தாக்குதல் காரணமா? உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து அமைச்சர் உட்பட 17 பேர் பலி

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர், 2 குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர். உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்க்கி, இணையமைச்சர் யெவ்ஹென் யெனின், உள்துறை அமைச்சக செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர் கீவ்வின் புறநகர் பகுதியான ப்ரோவெரிக்கு மேலே நேற்று பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் சிறுவர்கள் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த விபத்தில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்க்கி, இணையமைச்சர் யெவ்ஹென் யெனின், உள்துறை அமைச்சக செயலாளர் யூரி லுப்கோவிச், அமைச்சக அதிகாரிகள், 2 குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகி விட்டதாக உக்ரைன் தேசிய காவல்துறை தலைவர் இகோன் கிளமென்கோ கூறினார். மேலும் 10 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது விபத்தா? அல்லது ரஷ்யா தாக்குதல் நடத்தி வீழ்த்தியதா? என விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories: