சபரிமலையில் மகர விளக்கு தரிசனம் முடிந்தும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20ம்தேதி நடை சாத்தப்படுகிறது

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடையும்  கட்டத்தில் உள்ளது. பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம்  கடந்த 14ம் தேதி நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  குவிந்த லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்து திரும்பிச்  சென்றனர். சபரிமலையில் வழக்கமாக மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள்  வருகை குறைந்து விடும். ஆனால் தற்போது மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும்  சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. கடந்த 2  தினங்களாக காணப்பட்ட பக்தர்கள் வருகை நேற்றும் தொடர்ந்தது. மகரவிளக்கு  பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது  வழக்கம்.  

திருவாபரணத்துடன் காட்சியளிக்கும் ஐயப்பனை தரிசிப்பதற்காகவே  மகரவிளக்கு பூஜை முடிந்த பிறகும் பக்தர்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர். திருவாபரணம்  அணிந்த ஐயப்பனை இன்று (18ம் தேதி) வரை தரிசிக்கலாம். இன்றுடன் மண்டல,  மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். நாளை (19ம் தேதி) வரை  மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி உண்டு. 20ம் தேதி காலை 7 மணியளவில்  சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த வருட மண்டல, மகரவிளக்கு  காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 17ம் தேதி நடை  திறக்கப்படும்.

Related Stories: