ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரக் கொள்கைகளும், வரி விதிப்புகளும் எவ்வாறு பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது என்பது குறித்து ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் ஜி.எஸ்.டி வரி ரூ.14.83 லட்சம் கோடி, அதில் 97 சதவீதம் ரூ.14.40 லட்சம் கோடி ஏழை மற்றூம் நடுத்தர மக்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது, பணக்காரர்களிடமிருந்து 3 சதவீதம் ரூ.44,000 கோடி மட்டுமே பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை, மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி.

கடந்த 6 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களுக்கு ரூ.11.17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2019ம் ஆண்டில் கார்ப்பரேட் வரி 30சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும், புதிய நிறுவனங்களுக்கு 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 2020-21ம் ஆண்டில் மட்டும் பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகளின் மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி ஆகும். ஆனால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த விதமான வரிச்சலுகைகளும் வழங்கப்படவில்லை. எனவே, பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: