டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமில் யானை பொங்கல்

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறை சார்பில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் கும்கி ஆப்ரேஷன்கள் மற்றும் பல்வேறு வனத்துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, யானை பொங்கல் நிகழ்ச்சி வனத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் சார்பில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் முகாமில் உள்ள யானைகளுக்கு பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முகாமில் உள்ள யானைகளை பாகன்கள் குளிக்கவைத்து, அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பின்னர், பாரம்பரிய முறைப்படி மலை கிராம மக்கள் புது பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, யானைகளுக்கு பிடித்த கரும்பு, பழம், வெள்ளம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டன. ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம், வனசரகர்கள் சுந்தரவேல், புகழேந்தி, மணிகண்டன், வெங்கடேஷ்,  மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை பாகன்கள், மாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் டாப்ஸ்லிப்பில் குவிந்தனர்.

பின்னர், அங்கிருந்து வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் கோழிகமுத்தி சென்று யானை பொங்கல் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில வருடங்களாக இந்த யானை பொங்கல் நிகழ்ச்சி கோழிகமுத்தி முகாமில் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால், குறைந்தபடியான சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த முகாமுக்கு வந்து பொங்கல் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடிகின்றது. எனவே, பழையபடி டாப்ஸ்லிப் பகுதியில் இந்த யானை பொங்கல் நிகழ்ச்சியை நடத்த வனத்துறையினர் முன்னேற வேண்டும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யானை சவாரியையும் விரைவில் தொடங்க வேண்டும் என்று, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: