குமரி நடுக்கடலில் பரபரப்பு விசைப்படகில் மோதிய வெளிநாட்டு கப்பல்

குளச்சல்: குளச்சலை சேர்ந்த ரெஸ்லின் டானி (38), கடந்த 12ம் தேதி குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றார். படகை அவர் ஓட்ட, அதே பகுதியை சேர்ந்த 13 பேர் உடன் சென்றனர்.

14ம் தேதி மதியம் அவர்கள் சென்ற படகு கன்னியாகுமரி கடல்பகுதியில் 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்கு உள்ளேயே விழுந்தனர். நங்கூரத்தின் கயிறு கப்பலின் பிரப்பரில் சிக்கி சிறுது தூரம் படகு இழுத்து செல்லப்பட்டது.

இதை கவனித்த மெர்வின் கயிறை அறுத்து படகை விடுவித்தார். இதனிடையே கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது. அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். படகு சரியவே மீனவர்கள் செய்வதறியாது கூச்சலிட்டனர். பின்னர் உதவிக்கு அழைத்த படகு வந்து 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் நேற்றுமுன்தினம் காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை வந்தடைந்தனர். இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ. 1.25 கோடி என்று கூறப்படுகிறது. இது குறித்து ரெஸ்லின் டானி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: