கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நிரந்தர தாங்கு சுவர்: கனரக வாகனங்களை அனுமதிக்க விரைந்து கட்ட கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்க மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நிரந்தர தாங்கு சுவர் விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் வருவதற்கு வத்தலக்குண்டு, பழநி மலைச்சாலைகளை பயன்படுத்துகின்றனர். இதில் கொடைக்கானல்- பழநி சாலையில் சவரிகாடு அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் இடையூறாக இருந்த பாறை உடைக்கப்பட்ட பின்னர் பஸ் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த சாலை வழியாக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பழநி பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு லாரியில் எம் சாண்ட், கருங்கல்கள், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வத்தலக்குண்டு சாலை வழியாக கொண்டு வரப்படுகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் கட்டுமான பொருட்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எந்த ஒரு லோடுவிற்கும் ரூ.5 ஆயிரத்திற்கும் அதிகமாக தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வீடு கட்டும் சாதாரண பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் மிகுந்த செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல கேஸ் சிலிண்டர் வாகனமும் வத்தலக்குண்டு வழியாக சுற்றி வருவதால் நுகர்வோர்களுக்கு உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் கூடுதல் சீரமைப்பு பணிகளை உடனடியாக செய்து கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: