திமுக வளர்வதை தடுக்க நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்: இளைஞர் அணி செயலி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘திமுக வளர்வதை தடுக்கவும், எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி சார்பில், முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை, இளைஞர் அணி செயலி தொடக்கவிழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக இளைஞர் அணி செயலியை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ்,  இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டு, அவர் இந்த மூன்றரை ஆண்டுகாலத்திலே பல பணிகள் செய்திருக்கிறார். அதில் சிலவற்றை மட்டும் நான் சொல்ல வேண்டுமென்றால், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஊராட்சி தேர்தல் நடந்தது. அதில் உதயநிதியும் ஒரு மிகச் சிறப்பான சுற்றுப்பயணத்தை அதுவும் பெரும்பாலும் கிராம அளவிலே, ஊராட்சி அளவிலே அந்தப் பயணத்தை நடத்தி கட்சிக்கு, தேர்தரகரன வெற்றி வாய்ப்பைத் தேடித் தந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம், ஒரு செங்கல்தான்.  அது எந்த அளவிற்கு பிரசாரத்திற்கு பயன்பட்டது, எந்த அளவிற்கு தாக்கம் ஏற்பட்டது, மக்கள் மனதிலே எப்படியெல்லாம் அது பதிந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு அவர் எங்கேயாவது கூட்டத்திற்கு போனார் என்றால், அவரைப் பார்த்தால், செங்கல், செங்கல் என்றுதான் சொல்கிறார்கள், அந்தக் காட்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உதயநிதி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்பு, என்னிடத்தில் அனுமதியைப் பெற்று மரப்பலகையிலான பாதையை கடலுக்கு அருகில் செல்லக்கூடிய வகையில், கடற்கரையில் சென்று மாற்றுத் திறனாளிகள் காலை நனைக்கலாம் என்று இதுவரையில் எங்கும் இல்லாத ஒரு மிகப்பெரிய சாதனையை படைப்பதற்கு அவர் துணை நின்றிருக்கிறார். ஏற்கனவே அண்ணா தலைமையில், கலைஞர் தலைமையில் ஆட்சியில் இருந்தோம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்ட சாதனைகள், அதைத் தொடர்ந்து இன்றைக்கு அவர்கள் வழிநின்று ஆட்சி நடத்தக்கூடிய நாம் நடத்திக் கொண்டிருக்கும் சாதனைகள், இவையெல்லாம் மக்களுக்குப் போய் சேர்ந்திட வேண்டும். எதற்காக இதை வலுப்படுத்தி, கட்டாயப்படுத்தி சொல்கிறேனென்றால், இன்றைக்கு பார்க்கிறோம்.  முன்பெல்லாம் வானொலியில்தான் செய்திகளைக் கேட்போம்.

அது மாறி பத்திரிகைகள் வர ஆரம்பித்தது, காலையிலும், மாலையிலும் பத்திரிகை படிக்கிறோம், அதில் செய்திகளைப் படிப்போம். அது படிப்படியாக குறைந்து டி.வி. வந்தது. பத்திரிகைகளில் வருவதற்கு முன்பு டி.வி.யில் செய்தி வந்துவிடும், காலையில்தான் பத்திரிகை வரும், ஆனால் முன்தினம் இரவே ப்ளாஷ் நியூஸ் என்று போட்டு வந்துவிடும். இப்போது அதையும் தாண்டி கையிலேயே வந்துவிட்டது. வாட்ஸ்அப் என்று சொல்கிறோம், பேஸ்புக் என்று சொல்கிறோம். யுடியூப்  என்று சொல்கிறோம். டிவிட்டர் என்று சொல்கிறோம், இன்ஸ்ட்ராகிராம் என்று சொல்கிறோம். டெலிகிராம்  என்று சொல்கிறோம். இப்படி நவீன வகையில் பிரசாரங்கள். அதுவும் அதைப் பயன்படுத்திக்கொண்டு, நாம் வளர்வதைத் தடுப்பதற்கு, நம்மை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு ஒரு பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.

அதை நாம் முறியடிக்க வேண்டுமென்று சொன்னால், அது உங்களால்தான் முடியும்.பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைக்கிறபோது அப்படி பெயர் சூட்டப்படக்கூடிய அந்த விழாவிலே கலந்து கொள்ளவில்லை என்று சொன்னால், இந்த உயிர் இருந்து என்ன பயன். அப்படியென்று சொன்னவர் அண்ணா. இன்றைக்கு யாரோ தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறாரே, நான் கேட்கிறேன். அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம். இளைஞரணி தான் பெற்ற வரலாற்றை பேணிப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தம்பி உதயநிதியிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், உங்களை நம்பி, நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற அந்த உணர்வோடுதான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே,  அந்தக் கடமையை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டு, வாழ்க தமிழ்நாடு! வாழ்க தமிழ்நாடு!

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: