புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 85 நபர்களிடம் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடைபெற்றது: காவல்துறை தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், 85 நபர்களிடம் வாக்கு மூலம் பெற்று வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை தகவல் அளித்துள்ளது.

இறையூர் வேங்கைவயல் காலனி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்தது சம்பந்தமான வழக்கில் 85 சாட்சிகளை விசாரணை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் வட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்குட்பட்ட வேங்கைவயலில் கடந்த 26.12.22-ம் தேதி மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் இருந்தது தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி வழக்கில் குற்றவாளியை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் கண்காணிப்பளர் திரு. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 2 காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 36 சாட்சிகளிடமும், பிற சமூகத்தைச் சேர்ந்த 49 சாட்சிகளிடமும் விசாரித்து மேற்படி 85 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கபட்ட மாதிரியை ஆய்விற்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்வது தொடர்பாக விசாரணையானது உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நேர்மையாகவும் எந்த ஒரு ஒளிவுமறைவுமின்றியும், வெளிப்படைத் தன்மையுடனும், முழு முயற்சியுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது.

Related Stories: