உறைய வைக்கும் மைனஸ் டிகிரி ‘வெள்ளை மழை’யால் நடுங்குது நீலகிரி: உடலில் வெடிப்பால் மக்கள் பாதிப்பு

ஊட்டி: நீலகிரியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உறைபனி தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினமும் உறைபனி அதிக அளவில் கொட்டியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை அதிகபட்ச வெப்ப  நிலை 23 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. அவலாஞ்சி, அப்பர்பவானி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் மைனஸ் 1 முதல் 2 டிகிரி செல்சியசிற்கு சென்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங் மட்டம், கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. விவசாய நிலங்களில் உறைபனி  படர்ந்து காணப்பட்டது.

இதனால், அப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் விரித்ததுபோல் காட்சியளித்தது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர், ஐஸ் கட்டிகளாக மாறியிருந்தன. வீடுகளின் வெளியே பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் ஐஸ் கட்டிகளாக மாறின. நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர்  உள்ளது. வெள்ளை கம்பளமாக கொட்டும் கடும் பனிப்பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு  பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: