தனியார் பங்களிப்புடன் ரூ.1 கோடியில் படூர் பெரியகுளம் சீரமைப்பு பணி துவக்கம்

திருப்போரூர்: தனியார் பங்களிப்புடன் ₹1 கோடியில் படூர் பெரியகுளம் சீரமைப்பு பணி துவங்கியது.  திருப்போரூர் ஒன்றியத்தில்  உள்ள படூர் ஊராட்சியில் பெரியகுளம் உள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம், கிராம மக்களின் மிகப்பெரிய நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட குளம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி புதர்மண்டி காணப்பட்டது. இதையடுத்து குளத்தை சீரமைக்க படூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து படூர் இந்துஸ்தான் கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மற்றும் ஊராட்சி மன்ற பொதுநிதி மூலம் ₹1 கோடி மதிப்பில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், நான்கு பக்ககரைகளையும் மேம்படுத்தி கற்கள் பதித்தல், பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் வாக்கிங் செல்லும் வகையில் நடைபாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது. பணிக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. படூர் ஊராட்சி தலைவர் தாரா சுதாகர், பணியை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிர்வாகிகள், இந்துஸ்தான் பல்கலைக்கழக நிர்வாகிகள், தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், படூர் ஊராட்சி துணைத்தலைவர் வனிதா சேட்டு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: