ஒன்றிய அமைச்சரவையில் முடிவு: 3 புதிய பல மாநில கூட்டுறவு சங்கங்கள் அமைக்க ஒப்புதல்

புதுடெல்லி: இயற்கை வேளாண் பொருட்கள், விதைகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க, 3 புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைக்க ஒன்றிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியதாவது:

நாட்டின் கிராமப்புற வளர்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய அளவிலான கூட்டுறவு இயற்கை வேளாண் சங்கம், கூட்டுறவு விதை சங்கம் மற்றும் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் என 3 புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைக்க ஒன்றிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சங்கங்களில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்கள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை உறுப்பினர்களாக இணைய முடியும்.

தற்போது நாட்டில் 29 கோடி உறுப்பினர்களுடன் சுமார் 8.5 லட்சம் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்கள், இயற்கை வேளாண் பொருட்களை அங்கீகரிப்பதுடன், அவற்றுக்கு சான்றிதழை வழங்கும் பணியையும் மேற்கொள்ளும். உலக சந்தையில் இந்திய கூட்டுறவு சங்கங்களின் திறமையை வலுப்படுத்த உதவும். மேலும், தரமான விதைகளின் விநியோகம், சந்தைப் படுத்துதல், சேமித்தல், கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான முதன்மை அமைப்பாக இச்சங்கம் விளங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: