காற்று அதிகமாக வீசியதால் அலையாத்தி காட்டில் படகு போக்குவரத்து திடீர் நிறுத்தம்-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முத்துப்பேட்டை :கடலோர பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் அலையாத்தி காட்டில் படகு போக்குவரத்து திடீர் நிறுத்தம் செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.

இந்த அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூர பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். ஒட்டுமொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொக்க பூமியாக இந்த அலையாத்தி காடு திகழ்கிறது. இதன் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

இந்நிலையில் நேற்று காலை முதல் லகூன் மற்றும் அலையாத்திக்காட்டை ஒட்டிய கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசியது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு நேற்று சென்ற வனத்துறை அதிகாரிகள், நேரில் பார்வையிட்ட பின்னர் அலையாத்திக்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்லும் படகு போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: