விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வட கிழக்கு பருவமழை நாளையுடன் முடிவுக்கு வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் தேதி தொடங்கும், வடகிழக்கு பருவமழை 4 மாதங்கள் நீடிக்கும். அதனால்,  தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து நீர்நிலைகள் நிரம்புவது வழக்கம். ஆனால், இந்த  ஆண்டுக்கான பருவமழை சற்று தாமதமாக தொடங்கியது. முன்னதாக தென்மேற்கு பருவமழை காலத்தில், மழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது. அதற்கு பிறகு, தொடங்கிய வடகிழக்கு பருவமழையில் எந்த புயலும் உருவாகாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே இந்த ஆண்டில் பருவமழை பெய்து முடித்தது.

இந்த பருவத்தில் அதிகபட்சமாக சீர்காழி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாகவே மழை பெய்துள்ளது. இந்த பருவமழை ஜனவரி 20ம் தேதி வரை நீடிக்கும் என்று நீண்ட கால கணிப்பின் கீழ் முடிவு செய்யப்பட்டது. ஆனால், டிசம்பர் மாதமே பருவமழை  படிப்படியாக குறையத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நாளையுடன் (12ம் தேதி) முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதை ஒட்டிய  கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள்கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும். அதேநேரத்தில், ஓரிரு  இடங்களில் அதிகாலை நேரங்களில்  லேசான பனி மூட்டம் காணப்படும். உள்மாவட்டங்களில்  குறைந்த பட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கும்.  நீலகிரி  மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.

Related Stories: