குடியிருப்பு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை-விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் :  விழுப்புரம் அருகே புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் அருகே உள்ள முத்தோப்பு, அகரம்பாட்டை, சித்தேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, விழுப்புரம் நகரம், அகரம்பாட்டையில் குடியிருப்புக்கு இடையில் புதியதாக டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த 7ம்தேதி அமைக்கப்பட்டு செயல்படத்துவங்கியது.

இங்குள்ள அகரம்பாட்டை வழியாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சித்தேரிக்கரை, முத்தோப்பு பகுதி பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் அதிகளவில் சென்னை நெடுஞ்சாலைக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும் அங்கு கோயில்கள், தனியார் திருமண மண்டபங்கள், பள்ளிவாசல், பள்ளிக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். இதனால் இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் பெண்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இளையசமுதாயமும் இந்த டாஸ்மாக் மதுபானக்கடையினால் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

எனவே இந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடி பொதுமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு டாஸ்மாக்கடை அமைக்க பொதுமக்கள் ஆட்சேபனை செய்ததின் காரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடை உடனே அகற்றப்பட்டது. எனவே, இப்புகாரின் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பை கருதியும், இளைய சமுதாயம் நல்லமுறையில் வளர்வதற்காகவும் உடனடியாக இந்த பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக்கடையை அகற்ற வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories: