உத்தராகண்டில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்: ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணியை சமோலி மாவட்ட நிர்வாகம் இன்று தொடங்குகிறது. மலையூர் நகரமான ஜோஷிமத் நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் அதிகமாக ஏற்படும் பகுதியாகும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஜோஷிமத் நகரத்தின் ஒரு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதையுண்டு வருகிறது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களில் இருந்து சுமார் 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அபாயகரமான மண்டலம் என வரையறுக்கப்பட்டுள்ள இடத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளன.

அந்த பகுதியில் உள்ள மக்களையும் இடம் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலைப்பகுதியில் உள்ள மற்ற இடங்களின் உறுதி தன்மையை ஆராய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண் படையினர் ஜோஷிமத் நகரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மீட்பு ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள 2 ஹோட்டல்களை உடனடியாக இடித்து அகற்ற உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மெல்ல சரிந்து வரும் மவுண்ட் வியூ, மலர் இன் ஆகிய ஹோட்டல்களை இடிக்கும் பணியை சமோலி மாவட்ட நிர்வாகம் இன்று தொடங்குகிறது.

Related Stories: