காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட 160 வடமாநிலத்தவர்கள் ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: காவல் துறையின் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்கள் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் காவல் கரங்கள்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  கடந்த சுதந்திர தினவிழாவில்  தமிழக முதல்வர் தமிழக அரசின் “நல் ஆளுமை“ விருது வழங்கினார். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த “கருணைப் பயணம்-3” வழியனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,“காவல் கரங்கள்” மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சமீபத்தில் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 160 (ஆண்கள்-122, பெண்கள்-38) நபர்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கி, 50 தன்னார்வலர்களுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதுவரை சென்னையில் காவல் துறையின் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 3,788 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,905 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 467 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வைக்கப்பட்டும், 348 பேர் மன மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், 68 பேர்  மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் உரிமை கோரப்படாத 1,744 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும், காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் சென்னை கூடுதல் ஆணையர்கள் லோகநாதன், இணை ஆணையர் சாமூண்டிஸ்வரி, துணை ஆணையர் ராமமூர்த்தி, காவல் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: