கர்னல்: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை நடைப் பயணம் நடத்தப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. இந்த ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரியானாவின் கர்னல் மாவட்டத்தில் நடந்து வரும் ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடத்தப்படவில்லை. இது ராகுல் காந்தி தலைமையிலான சித்தாந்த ரீதியிலான நடைப்பயணம். இந்த பயணத்தின்போது, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகள், அரசியல் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக ராகுல் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த யாத்திரைக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினார்.