பெரியகுளம் பகுதிகளில் கரும்பு கொள்முதலில் அதிகாரிகள் முறைகேடு?

*விவசாயிகள் புகார்

பெரியகுளம் : பெரியகுளம் பகுதிகளில் கரும்பு கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, காமாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் 6 அடி நீளம் கொண்ட ஒரு கரும்பின் விலை ரூ.33 என நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட்டது. இதனால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தேவதானப்பட்டி பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் பணியை கூட்டுறவுத்துறையினர் துவக்கி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் ஆறு அடி நீளத்திற்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே அறுவடை செய்து கூட்டுறவுத் துறையினரிடம் வழங்கி வருகின்றனர். ஆனால் அரசு அறிவித்த 33 ரூபாய் கரும்பு விலையை கொள்முதல் செய்யும் கூட்டுறவு அதிகாரிகள் வழங்க மறுப்பதாகவும், 25 ரூபாய்க்கு தான் பொங்கல் கரும்பு எடுப்பதாகவும் மீதமுள்ள எட்டு ரூபாய்க்கு பல்வேறு செலவுகள் இருப்பதாகவும் கூறி, வற்புறுத்தி பொங்கல் கரும்பு கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ஆறு அடிக்கு கீழ் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்ய மறுப்பதால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘அரசு அறிவித்த 33 ரூபாய் வழங்காமல் அதிகாரிகள் 25 ரூபாய் தான் வழங்குகின்றனர். அதில் கரும்பை அறுவடை செய்து லாரிகளில் ஏற்றும் செலவு, இதர செலவு என 5 ரூபாய் கழித்தாலும், ஒரு கரும்பிற்கு 20 ரூபாய் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு மட்டுமே ஏற்படும். இந்த நிலை காரணமாக பெரும்பாலான விவசாயிகள் அரசுக்கு கரும்பு வழங்க முன்வர மறுத்து வருகின்றனர். எனவே தமிழக அரசு அறிவித்த 33 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: