பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்

*மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6 வட்டங்களுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழு கரும்புகளை அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6 வட்டங்களுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்புகள் ஊட்டி என்சிஎம்எஸ்., வளாகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக்கரும்பு ஒன்றினையும் சேர்த்து வழங்க ஆணையிட்டார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா வட்டத்தில் உள்ள 33 ரேசன்கடைகளுக்கு 15 ஆயிரத்து 645 கரும்புகளும், குன்னூர் வட்டத்தில் 83 ரேசன் கடைகளுக்கு 45 ஆயிரத்து 980 கரும்புகளும், ஊட்டி வட்டத்தில் 112 ரேசன் கடைகளுக்கு 56 ஆயிரத்து 647 கரும்புகளும், கூடலூர் வட்டத்தில் 63 கடைகளுக்கு 41 ஆயிரத்து 379 கரும்புகளும், பந்தலூர் வட்டத்தில் 48 கடைகளுக்கு 30 ஆயிரத்து 597 கரும்புகளும், கோத்தகிரி வட்டத்தில் 64 கடைகளுக்கு 29 ஆயிரத்து 546 கரும்புகளும் என மொத்தம் 403 ரேசன்கடைகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 794 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள கரும்புகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன, என்றார். தொடர்ந்து ஊட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,அமுதம் நியாய விலைக்கடை மற்றும் முத்தோரை பகுதியில் செயல்படும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொங்கல் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட உள்ள பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகானந்தம், உதவி மேலாளர் மாரீஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: