ராஜஸ்தானுக்குள் நுழையும் ஆம்ஆத்மி: 200 தொகுதியில் போட்டியிட முடிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் ஆளும் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், புதியதாக ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதிக்க ஆயத்தமாகி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் சந்தீப் பதக், சமீபத்தில் ராஜஸ்தான் மாநில ஆம்ஆத்மி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து ஆம் ஆத்மியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் மிஸ்ரா கூறுகையில், ‘ராஜஸ்தான் பேரவை தேர்தலில் 200 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும். காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக மாற்று அரசியலை முன்னெடுத்துள்ளோம்’ என்றார். டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் ஆம் ஆத்மி, சமீபத்தில் தேர்தல் நடந்த இமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: