தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 6.20 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் வழக்கத்தைப் போல ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 9ம்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26,182 வாக்காளர்கள் இருந்தனர். இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி கடந்த நவம்பர் 9ம்தேதியில் இருந்து டிசம்பர் 8ம்தேதி வரை நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்து 2023ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 1.1.2023ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 9ம்தேதி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நவம்பர் 9ம்தேதியில் இருந்து டிசம்பர் 8ம்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய மனுக்கள் பெறப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10லட்சத்து 54 ஆயிரத்து 566 பேரும், பெயர் நீக்கம் செய்ய 8லட்சத்து 43 ஆயிரத்து 007 விண்ணப்பங்களும், முகவரி மற்றும் திருத்தம் செய்ய 2லட்சத்து 15ஆயிரத்து 308 பேர் விண்ணப்பம் செய்தனர்.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 20லட்சத்து 41,179 வாக்காளர்கள் தற்போது இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,04,89,866 பேரும், பெண் வாக்காளர்கள் 3,15,43,286 பேரும், 3ம் பாலினத்தவர் 8027 பேரும் உள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு 6லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக கோவை மாவட்டத்துக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4லட்சத்து 57 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதியாக சென்ைன மாவட்டத்துக்குட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது.

இந்த தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 70ஆயிரத்து 125 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,310 வெளிநாட்டு வாழ் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலின் படி 4லட்சத்து 48 ஆயிரத்து 138 வாக்காளர்கள் மாற்று திறனாளிகளாக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

 கடந்த தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்தால் இந்த நடைமுறை பின்பற்றப்படும். தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுள்ள 4லட்சத்து 66 ஆயிரத்து 374 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் உள்ள டிஆர்ஓ அலுவலகம் அல்லது தேர்தல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் 17 வயது நிறைவடைந்தவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஜன.1, ஏப்.1, ஜூலை 1, அக்.1 ஆகிய நாட்களை தகுதி ஏற்படுத்தும் நாட்களாக கொண்டு அவர்களது பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று வரை 3.82 கோடி பேர்(66.60 சதவீதம்) ஆதார் எண்ணை இணைப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது  வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இரண்டு நகல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் நகல் தேவைப்பட்டால் ரூ.100 செலுத்தினால் பிடிஎப் காப்பி வழங்கப்படும். மேலும் சந்தேகம் இருந்தால் அந்தந்த மாவட்ட எஸ்பிடி எண்ணுடன் 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள 180042521950 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். புதிதாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் விரைவு தபால் மூலம் வீடுகளுக்கே வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது என்ற தகவல் இன்று அல்லது நாளை தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கும். அந்த தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

*  22 ஆயிரம் போலி வாக்காளர்கள்

 மேலும், சத்யபிரதா சாகு கூறுகையில், ‘‘தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 2.4லட்சம் பேர்  இறந்தவர்களாக கருதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 21,914 போலி அடையாள  அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடி மையத்தில்  1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால் அவை பிரிக்கப்பட்டு கூடுதலாக  பூத் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

*  அதிமுகவுக்கு வேறு கடிதம் அனுப்பப்பட மாட்டாது

  மேலும் அவர் கூறுகையில்,‘‘ வரும் 16ம்தேதி டெல்லியில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.  இதில், புலம் பெயர்ந்த வாக்காளர்கள் அந்தந்த மாநிலத்திலேயே வாக்களிக்கும்  நடைமுறை குறித்து விவாதிக்கப்படும். தமிழகத்தில் இதற்காக திமுக, அதிமுக  உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை  ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இரண்டு தபால் அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு  தபால்களையும் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டனர். இதுகுறித்து  இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய  தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த தபால்  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  டெல்லியில் இருந்து வேறு எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. அப்படி தகவல்  வந்தால் தான் அவர்களுக்கு இனி வேறு கடிதம் அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். 

Related Stories: