திருத்தணி முருகன் கோயிலில் தெப்பக் குளத்தில் துர்நாற்றம்: சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் சரவண பொய்கை குளத்தை சீரமைக்கவேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. பல பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள சரவண பொய்கை தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடிவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காவடி சுமந்துவரும் பக்தர்களும் சரவண பொய்கை குளத்தில் குளித்துவிட்டு மலைக்கோயிலுக்கு சென்று முருகனை வழிபடுகின்றனர். இந்த சம்பவம் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சரவண பொய்கை குளத்தை பாதுகாக்க குளத்தை சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு அன்று கோயிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் சரவண பொய்கையில் நீராட சென்றபோது பாசி படர்ந்து கடும் துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பக்தர்கள் குளிக்காமல் வெளியேறிவிட்டனர். இதுபற்றி கோயில் நிர்வாகத்துக்கு தெரிவித்தும் கண்டுகொள்ளாம் இருந்துவிட்டதாக தெரிகிறது. எனவே, சரவண பொய்கை குளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Related Stories: