வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபதவாசலை கடந்தார் நம்பெருமாள்; ரங்கா...ரங்கா...கோஷம் விண்ணதிர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. நம்பெருமாள் ரத்தின அங்கி, கிளி மாலை அலங்காரத்தில் சொர்க்கவாசலை கடந்தார். அப்போது ரங்கா, ரங்கா, கோஷம் விண்ணதிர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் போது 10 நாட்களும் பல்வேறு கொண்டை மற்றும் விலை உயர்ந்த திருவாபரணங்கள் அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளான நேற்றுமுன்தினம் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு நேற்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.

நம்பெருமாள் ரத்தின அங்கி, கிளி மாலையுடன், பச்சை பட்டு உடுத்தி மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விருச்சிக லக்னத்தில் ஒய்யார நடையுடன் வந்து மேலப்படி வாசலில் இருந்து கீழே எழுந்தருளினார்.  நம்பெருமாள், பரமபதவாசலுக்கு எதிரில் வடக்கு முகமாய் நின்றார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த வாசலுக்கு கிழக்கு பக்கத்தில் விரஜா நதியின் ஸ்தானத்தில் ஒரு கிணறு உள்ளது. இங்கிருக்கும் நாலுகால் மண்டபத்தில் ரிக், யஜூர், சாம, அதர்வன வேத விண்ணப்பமாகி பெருமாள் இந்த வாசலுக்கு போனவுடன் அதுவரையில் நம்பெருமாளை மூடிக்கொண்டு வந்த போர்வை களையப்பட்டு புது மாலைகள் சமர்பிக்கப்பட்டது.

அதன்பின் ரத்ன அங்கியோடு நம்பெருமாள் பரமபதவாசல் நுழைந்து சென்றார். சந்திரபுஷ்கரணி அருகே பூப்பந்தல் நடைவழியாக ஆயிரங்கால் மண்டபம் சென்றார். எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் நம்மாழ்வார், திருமங்கைமன்னன், உடையவர் ஆகியோர் எதிர்கொண்டு அழைத்தனர். அங்கு ஆழ்வார்களுக்கு மரியாதை செய்துவிட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்து படியேற்ற மாலை சாத்திகொண்டார். அதன்பின் நம்பெருமாள் திருமாமணிமண்டபத்தில் எழுந்தருளினார். அவர், எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது முக்தன் பரமபதத்திலுள்ள திருமாமணி மண்டபத்தை அடைந்து இருப்பதை போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நேற்றுமுன்தினம் இரவே கோயில் வளாகத்தில் குவிந்து இருந்தனர். நம்பெருமாள், சொர்க்கவாசலை கடந்தபோது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், ஆதிகேசவலு, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா... ரங்கா... கோஷம் விண்ணதிர பக்தி பரவசத்துடன் பரமபதவாசலை கடந்தும், மூலவரை முத்தங்கியிலும் நம்பெருமாளை ரத்தினஅங்கியுடனும் தரிசனம் செய்தனர்.

முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அனுமதி அட்டை பெற்று இருந்தவர்கள் கோயிலுக்குள் அதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி பாதைகள் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் இரவில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளிய பின்னர் அந்த வழியாக சென்று அவரை தரிசிப்பதற்காகவும், மூலவரை முத்தங்கி சேவையில் தரிசனம் செய்வதற்காகவும் கோயில் பிரகாரங்களில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்து தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

* ராப்பத்து உற்சவம் துவக்கம்

சொர்க்கவாசல் திறப்பையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. ராப்பத்து உற்வசத்தின் 7ம் நாளான 8ம்தேதி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் கைத்தல சேவையும், 8ம் திருநாளான 9ம் தேதி, திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடக்கிறது. கடைசி நாளான 12ம் தேதி நம்மாழ்வார் எப்படி மோட்சம், இயற்பா சாற்றுமறையுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

* 112ம் ஆண்டாக நம்பெருமாளுக்கு ரத்தின அங்கி அணிவிப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவின் சொர்க்கவாசல் திறப்பு அன்று ஒவ்வொரு ஆண்டும் நம்பெருமாளுக்கு ரத்தின அங்கி அணிவிக்கப்படுகிறது. இதே போல் இந்த ஆண்டு 112ம் ஆண்டாக ரத்தின அங்கி நம்பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.

Related Stories: