கொடிவேரி அணையில் அருவிபோல கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

கோபி: புத்தாண்டையொட்டி கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் அருவிபோல் கொட்டிய தண்ணீரில் உற்சாக குளியல் போட்டனர். ஈரோடு மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவது கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஆகும். நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு படையெடுத்தனர். தடை ஏதும் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர்.

அணையில் அருவிபோல கொட்டிய தண்ணீரில் உற்சாகமாக குளித்தும், கடற்கரை போல அமைந்துள்ள மணலில் அமர்ந்தும், அங்கு விற்கப்படும் மீன்களை வாங்கி சாப்பிட்டும், பரிசல் பயணம் செய்தும் அவர்கள் மகிழ்ந்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து அணையை சுற்றிலும் கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: