கலைத்திருவிழாவில் திருமக்கோட்டை அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்: இசைப் பிரிவில் 5 பரிசுகளை வென்றனர்..!!

திருவாரூர்: தமிழக அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை அரசுப்பள்ளி மாணவிகள் இசைப்பிரிவில் மட்டும் 5 பரிசுகளை வென்று அசத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கலை திருவிழா நடத்தப்பட்டது. 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்றவர்கள் மாநிலஅளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் இசைப்பிரிவில் மட்டும் மாநிலஅளவில் ஐந்து பரிசுகளை திருமக்கோட்டை அரசுப்பள்ளி மாணவிகள் பெற்றுள்ளனர்.

காற்றுக்கருவியில் கோணக்கொம்பு இசைத்தல் போட்டியின் தனிநபர் பிரிவில் திருமக்கோட்டை அரசுப்பள்ளி மாணவி லோகாஸ்ரீ முதலிடம் பிடித்து முத்திரை பதித்துள்ளார். தூத்தேரி இசைத்தல் போட்டியில் மாணவி மித்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதே போல தோல் கருவியான தவண்டை வாசித்தலில் தேசிகாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.  கொக்கரை வாசித்தலில் மாணவி மீனாட்சி முன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இது தவிர குழு பிரிவில் நாதசங்கமத்தில் இப்பள்ளி மாணவிகள் இரண்டாவது இடத்தை கைப்பற்றினர்.

மாநிலஅளவில் இசைப்பிரிவில் மட்டும் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பயிற்சியளித்த அப்பள்ளியின் இசை ஆசிரியர் தினேஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இசையில் முனைவர் பட்டம் பெற்ற தினேஷ்குமார் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவிகளுக்கு இசை கற்றுத்தந்ததாக தெரிவித்தார். மாநிலஅளவில் சாதனை புரிந்துள்ள திருமக்கோட்டை அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களும், ஊர்மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Related Stories: