வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் களைகட்டியது: குழந்தைகளுடன் குதூகலம்

நாகப்பட்டினம்: புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையால் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று இந்தப் பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நேற்றே திரண்டனர். இதனால் வேளாங்கண்ணி கடைவீதி மற்றும் கடற்கரை களைகட்ட துவங்கியது.

தொடர் விடுமுறை மற்றும் விழாக்காலம் என்பதால் வேளாங்கண்ணி கடற்கரை பகுதி, பேராலய வளாகம், சர்ச் சாலை, தியான மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். பேராலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது. அதேபோல் கீழ் கோவிலுக்கு செல்லும் பாதை, விண்மீன் ஆலயத்திற்கு செல்லும் பாதை, மற்றும் தியான மண்டபம் அருகில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின்விளக்கு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

Related Stories: