அமித்ஷா அறிவிப்பு கர்நாடகா தேர்தலில் பாஜ தனித்து போட்டி

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தனித்து போட்டியிடும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜ 108 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. 224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

இந்நிலையில், 2023ல் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதுதொடர்பாக, பெங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் நேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘வரும் தேர்தலில் பாஜ, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக வதந்தி பரப்புகின்றனர். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டோம்.

பாஜ தனித்து போட்டியிடும். கடந்த முறையைப் போல் இல்லாமல் இம்முறை பாஜ பெரும்பான்மை பலத்துடன், அதாவது 3ல் 2 பங்கு தொகுதிகளுடன் மகத்தான வெற்றி பெற வேண்டும். மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஓட்டு போடுவது, காங்கிரசுக்கு ஓட்டு போடுவதற்கு சமம். காங்கிரசை பொறுத்தவரை, அதிகாரத்தைப் பெறுவது ஊழல் செய்வதற்கான ஒரு வழியாகும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும். சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 6 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்துள்ளது’’ என்றார்.

Related Stories: