பொங்கல் பரிசு தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பை வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. பொங்கல் பரிசு தொகுப்பு சரியாக விநியோகிக்கப்படுவதை ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், பச்சரிசி, முழு கரும்பு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் துணை ஆணையர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்கும் பணியை மேற்கொள்வார். ஜனவரி 9 முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொங்கல் பரிசு, ரொக்கப்பணம் பெற ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 3 முதல் 8-ம் தேதி வரை டோக்கன் வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

பொங்கல் பரிசு விநியோகத்துக்காக ஜனவரி 13-ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 13-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டதால் அதனை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 27-ம் தேதி நியாய விலைக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: