அடேங்கப்பா! 365 நாட்களில் 3330 உணவு ஆர்டர்: டெல்லி இளைஞரின் சுவாரசிய சாதனை

புதுடெல்லி: உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் ஒரு வருடம் முழுவதும் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 3330 உணவு ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர சுவாரசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று உணவு டெலிவெரி செய்து வருகின்றன. இந்நிலையில் அதில் ஒரு  நிறுவனமான சோமோட்டோ, 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர சுவாரசிய அறிக்கையை அதன் செயலியில் நேற்று வெளியிட்டுள்ளது. அதில்,‘‘டெல்லியைச் சேர்ந்த அங்கூர் என்பவர் 2022 ஆண்டில் 3330 முறை எங்களது நிறுவனத்திடம் உணவை ஆர்டர் செய்துள்ளார்.

இந்தியாவிலேயே ஒருவர் ஆர்டர் செய்த உணவின் அதிகபட்ச அளவு இதுவே ஆகும். நாள் ஒன்றுக்கு ஒன்பது முறை எங்களது செயலி மூலம் அங்கூர் உணவை ஆர்டர் செய்தார். இதையடுத்து சிறந்த உணவுப் பிரியர் என்ற கிரீடம் அங்கூருக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பீட்சா உள்ளது. ஒவ்வொரு நிமிடமும் 139 பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

சோமோட்டோ அறிவித்த  தள்ளுபடியை பயன்படுத்திய மும்பையைச் சேர்ந்த ஒருவர், அனைத்து உணவு ஆர்டர்களிலும் ஒரு வருடத்தில் ரூ.2.43 லட்சத்தைச் சேமித்துள்ளார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போன்று, மற்றொரு உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் மசாலா தோசை, சிக்கன் ப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆகியவை முன்னிலையில் உள்ளன. அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்கள் குவிந்தன.

Related Stories: