கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது சரிதா நாயர் கூறிய பாலியல் புகாரில் உண்மையில்லை: நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை

திருவனந்தபுரம் : கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது சேலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயர் கூறிய பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என நீதிமன்றத்தில்  சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கேரளாவில சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்த முறைகேடு நடந்தது. இந்த சம்பவம் ெதாடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். அப்போது, முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சரிதா நாயர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில் உண்மை இல்லை என்று காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.

பின்னர், கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடதுசாரி கூட்டணி ஆட்சி பதவி ஏற்றது. மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வந்த விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த 2021ம் ஆண்டு கேரள அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றது. இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் விசாரணை அறிக்கை திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், முதல்வராக இருந்த உம்மன் சாண்டியால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த பெண், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளன்று முதல்வரின் அதிகாரபூர்வ  இல்லத்திற்குச் சென்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த பெண்ணின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: