ரத்த ஓவியங்களுக்கு இன்று முதல் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

திருச்சி: ரத்தத்தால் வரையப்படும் ஓவியங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்று வரும்  கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் கம்போடியாவில் இருந்து ஒருவருக்கும் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவர் ஆந்திர மாநிலம்  கடப்பாவை சேர்ந்தவர். மற்றொருவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகத்தில் புதிய  கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவது. அதை ஒரு தொழிலாகவே பலர் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நேற்று சென்னையில் பிளட் ஆர்ட் நிறுவனங்களை சோதனை செய்து அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர். சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்த தொழிலை நிறுத்திக்கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அன்பு, நட்பு, காதல் மூன்றையும் பகிர்ந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. அதற்கு ரத்த ஓவியங்கள் தான் வழி என்று கூறுவது தவறு. எனவே ப்ளட் ஆர்ட் என்று சொல்லக்கூடிய ரத்தத்தினால் வரையப்படும் ஓவியங்கள் மற்றும் அதனை வரைந்து கொடுக்கும் நிறுவனங்களுக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: