வான் வழியே பாய்ந்து வரும் தங்க மழை: 5 ஆண்டுகளில் 11 டன் கடத்தல்; இறக்குமதி வரி, விலை உயர்வால் அதிகரிப்பு; தடுக்க மாற்று வழியை தேடுமா ஒன்றிய அரசு

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் நிறுவன தின விழாவில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம் கடத்தலுக்கும், இறக்குமதிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயுமாறும், தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்த போதும், கடத்தல் ரூபத்தில் தங்கம் இந்தியச் சந்தையில் குவிந்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துத் தங்கத்தை பறிமுதல் செய்கின்றனர். எனினும், கடத்தல் காரர்கள் விதவிதமாக யோசித்து நூதன முறைகளில் கடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் 61 கிலோ எடையுள்ள சுமார் ரூ.32 கோடி தங்கம் சிக்கியது. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தான்சானியைவை சேர்ந்தவர்கள் பெல்ட்டில் ரகசிய அறைக்குள் வைத்து கடத்தி வந்துள்ளனர். மற்றொருவர் பெல்ட்டில் மெழுகு வடிவில் தங்கத்தைப் பூசி வைத்து கடத்தியுள்ளார். இதுபோல் ஷூவுக்குள் ரகசிய அறை மற்றும் பவுடர் வடிவில் வேறு பொருளுடன் கலந்தும் கொண்டுவரப்படுகிறது. இவை பிடிபடுவதற்கு பெரும்பாலும் சுங்க அதிகாரிகளுக்கு வந்த ரகசியத் தகவல்தான் உதவியிருக்கிறது.

வருவாய் புலனாய்வு இயக்குநரக புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2021-22 நிதியாண்டில் 833 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.500 கோடி. இதற்கு முந்தைய நிதியாண்டில் (2020-21) கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வளைகுடா நாடுகளுடனான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், தங்கம் கடத்தல் குறைந்தது. 2019-20 நிதியாண்டில் 2.62 டன் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டில் பிடிபட்ட தங்கம் குறைவுதான். இதற்கு முந்தைய ஆண்டுகளில், அதாவது, 2018-19 நிதியாண்டில் ரூ.833.5 கோடி, 2017-18ல் ரூ.531 கோடி மற்றும் 2016-17 நிதியாண்டில் ரூ. 243 கோடி பிடிபட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.3,122.8 கோடி மதிப்பிலான 11 டன் தங்கம் இந்திய விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக, கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இவ்வளவு தங்கம் பிடிபட்டிருந்தாலும், இதை விட அதிகமாகவே தங்கம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கம் முந்தை ஆண்டை விட 33 சதவீதம் அதிகமாக, அதாவது 160 டன்னாக இருக்கும் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 30ம் தேதியில் இருந்து, தங்கம் இறக்குமதிக்கு சுங்க வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இது தவிர, விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான 2.5 சதவீதமும் விதிக்கப்படும். இத்துடன் சேர்த்து, தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீத வரி செலுத்த வேண்டி வரும். இந்த வரி உயர்வுதான், தங்கம் கடத்தலுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. இது தவிர, தங்கம் விலையும் மற்றொரு முக்கிய காரணம். கடந்த 2012ம் ஆண்டில் 24 கேரட் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.28,067 ஆக இருந்தது. இது 2020ல் ரூ.59,000 ஆகவும், தற்போது ரூ.54,000ஐ தாண்டி விட்டது.

2003-04ம் ஆண்டில், இந்தியாவை உலக அளவிலான தங்க வர்த்தக மையமாக மாற்றும் நோக்குடன், அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் தங்கம் இறக்குமதி வரியை 10 கிராமுக்கு ரூ.250ல் இருந்து ரூ.100 ஆகக் குறைத்தார். 2008-09 வரை இது தொடர்ந்தது. அப்போது கடத்தலும் இந்த அளவுக்கு இல்லை. கடந்த ஜூலை மாதம் நிதியமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை ரூ.9,661 கோடி மதிப்புக்கும் மேலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 29,506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1,543 வழக்குள் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் பதிவானவை. இந்த காலக்கட்டத்தில் மட்டும் 7,287 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2019-20ல் 1,944 கிலோ, கடந்த ஆண்டில் நவம்பர் 2021 வரை 1,717 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை, 166 பேரிடம் இருந்து ரூ.373.83 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும், கடத்தல் தங்கத்தில் இது ஒரு பகுதிதான் என தெரிவித்துள்ள அகமதாபாத் ஐஐஎம்-ல் உள்ள இந்திய தங்க கொள்கை மையம், ஆண்டு தோறும் குறைந்தது 300 டன் தங்கம் இந்தியாவுக்கு கடத்தப்பட்டிருக்க வேண்டும் என கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு 1,067 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பு தங்கம் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 டன்களாகத்தான் இருந்தது. தங்கம் கடத்தல் அதிகரிப்புக்கு இறக்குமதி வரி அதிகரிப்பை மிக முக்கிய காரணமாகக் கூறுகின்றனர். எனவே, வரி வசூலிலேயே ஒன்றிய அரசு கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரி உயர்வுக்கும் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாகப் பலரும் தெரிவித்து வரும் நிலையில், கடந்த 2021ம் ஆண்டு தங்கம் இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக குறைத்த ஒன்றிய அரசு, கடந்த ஜூலையில் திடீரென 15 சதவீதமாக உயர்த்தியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த ஜூலையில் திடீரென 15 சதவீதமாக உயர்த்தியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், இதை விட அதிகமாக கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைந்த நிலையில், கடந்த ஆண்டு இந்திய மதிப்பில் ரூ.3.4 லட்சம் கோடி அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது, அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைவதால் தங்கம் இறக்குமதிக்கு அதிக விலையை இந்தியர்கள் கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த ஆண்டு மேலும் அதிக தங்கம் கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் பட்ஜெட்டிலாவது இது குறித்து உரிய முடிவை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.  இந்தியர்கள் தங்க நகை வாங்குவதை சென்டிமென்டாக கருதுகின்றனர்.  இதனால் பல சமயங்களில் அவர்கள் விலையைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, இறக்குமதி வரியை அதிகரிப்பதால் மட்டுமே நடப்புக்கணக்கு பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* வருவாய் புலனாய்வு இயக்குநரக புள்ளி விவரப்படி, கடந்த 2021-22 நிதியாண்டில் 833 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.

* நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கம் , முந்தைய ஆண்டை விட 33 சதவீதம் அதிகமாக இருக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

* கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பு தங்கம் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு சுமார் 800 டன்களாக இருந்தது. இறக்குமதி வரி அதிகரிப்புதான் கடத்தல் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆண்டு    இறக்குமதி வரி

1990-91    7.21%       

2008-09    0.80%

2011    1%

2012 ஜன.    2%

2012 மார்ச்    4%

2013 ஆக.    10%

2019    12.50%

2020    12.50%

2021    7.50%

2022 ஜூலை    15%   

கடந்த ஓராண்டில் பிடிபட்ட கடத்தல் தங்கம்

* 2021 நவ.: தென் கொரியாவை சேர்ந்த 2 பேர், சீனா மற்றும் தைவானைச் சேர்ந்த ஒருவர் இயந்திரங்களில் பதுக்கி வைத்து 41 கிலோ தங்கம் கடத்தி பிடிபட்டனர்.

ஜூலை: ஜீன்ஸ் பேண்ட்டில் இடுப்பில் பேஸ்ட் வடிவிலும், செயின் வடிவிலும் தங்கத்தை மறைத்து வைத்து 5.9 கிலோ கடத்திய 2 பேர் கொல்கத்தா விமான நிலையத்தில் பிடிட்டனர்.

* 2022 செப்: மியான்மர் மற்றும் வங்கதேச எல்லையில் கடத்தப்பட்ட 121 கிலோ தங்கம் படிபிடிபட்டது.

மே, 11: டெல்லியில் சரக்கு விமானத்தில் கடத்தப்பட்ட 61.5 கிலோ தங்கம் பிடி பட்டது. இது சீனாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அக்.10: தங்கத்தை திரவ வடிவில் ஆக்கி டவலில் உறிஞ்சி வைத்து கடத்திய திருச்சூர் ஆசாமி கொச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.

அக்.11-12: கோழிக்கோடு விமான நிலையத்தில் 64 கிலோ தங்கத்துடன் ஒருவர் பிடிபட்டார். மும்பை விமான நிலையத்தில் 4 பேரிடம் இருந்து 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நவ.13: தான்சானியா மற்றும் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்தில் 61 கிலோ தங்கம் கடத்திய 7 பேர் பிடிபட்டனர்.

நவ.5: போன், வாட்ச், எல்இடி பல்புகளில் மறைத்து கடத்தப்பட்ட 11.78 கிலோ தங்கம் மங்களூரு விமான நிலையத்தில் சிக்கியது.

அக்.28: துபாயில் இருந்து கொச்சி விமான நிலையத்துக்கு பேண்ட் ஜிப்பில் மறைத்து கடத்திய 47 கிராம் தங்கம் பிட ிபட்டது.

அக்.16: ரப்பர் பேஸ்ட் போல் ஆக்கி டாய்லெட் சுவரில் மறைத்து கடத்தப்பட்ட 2.6 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது.

* வேலை இழப்பும் தங்கம் கடத்தலும்

விமானத்தின் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது. சாதாரண பயணிகளே இதனை மேற்கொள்கின்றனர். இவர்களை அணுகும் கடத்தல்காரர்கள், இலவசமாக டிக்கெட் எடுத்துக் கொடுத்து, தங்கத்தை கடத்தச் செய்கின்றனர். கடத்தலுக்காக தனியாக ரூ.1 லட்சம் கொடுக்கின்றனர். கொரோனாவால் வேலை இழந்தவர்கள் பலரை இந்த கடத்தல் காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என, சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், தங்கத்தை தங்கள் உடைமைகளுடன் எடுத்து வந்தால் 38.5 சதவீதம் வரியை பயணிகள் செலுத்த வேண்டி வரும். இதுவும் தங்கம் கடத்தலுக்கு காரணமாக அமைகிறது என கூறப்படுகிறது.

* வெளிநாடுகளில் அதிகநாள் தங்குபவர்களுக்கு சலுகை

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், ஆண்டுக்கணக்கில் அங்கே தங்குகின்றனர். இவர்களுக்கு தங்க நகை கொண்டுவர சலுகை உண்டு. ஓராண்டுக்கு மேல் வெளிநாடுகளில் வசிக்கு ஆண் பயணி ரூ.50,000 மதிப்புள்ள தங்கத்தையும், பெண் பயணி ரூ.1லட்சம் மதிப்பிலான நகையையும் கொண்டுவரலாம். இதுபோல், 6 மாதம் முதல் ஓராண்டு வரை வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள், 1 கிலோ வரையிலானதங்கத்தை கொண்டுவர 13.75 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது.

* பழைய தங்கத்துக்கும் ஜிஎஸ்டி

தங்கம் விலை உயர்ந்து வரும்போதெல்லாம், பழைய தங்கத்தை புதிய தங்கமாக மாற்றுவதற்கு மக்கள் விரும்புகின்றனர். இந்த வகையில் இந்தியாவில் 75 டன் பழைய தங்கம் புதிய நகைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது சீனாவில் 168 டன்களாகவும், இத்தாலியில் 80 டன், அமெரிக்காவில் 78 டன்களாக உள்ளது. இருப்பினும், பழைய தங்கத்தை மாற்றும்போதும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

* கடத்தலும், வழக்குகளும்

உலக அளவில் கடத்தப்படும் தங்கத்தில், 3ல் ஒரு பகுதி இந்தியா வழியாக செல்கிறது. பெரும்பாலும் ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு எமிரேட், மியான்மர், கஜகஸ்தான் வழியாக கடத்தி வருகின்றனர். நிதியமைச்சக புள்ளி விவரப்படி, தங்கம் கடத்தல் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளில் அதிகப்ட்சமாக தமிழகத்தில் 7,722 வழக்குகள், மகாராஷ்டிராவில் 7,47 வழக்குள், கரேளாவில் 5,080 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020ம் ஆண்டு வரை, தங்கம் கடத்தல் தொடர்பான வழக்குள் ஆண்டுக்கு சராசரியாக தமிழகத்தில் 772, மகாராஜ்டிராவில் 705, கேரளாவில் 272 பதிவாகிறது. ஆனால், கடந்த 2020 ஜனவர முதல் கடந்த ஜுன் மாதம் வரை கேரளாவில் 1880 வழக்குள், தமிழகத்தில் 1632 வழக்குள், மகாராஷ்டிராவில் 776 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடத்தல் உத்திகள்

* தங்கம் கடத்தலுக்கு பெரும்பாலும் அப்பாவி பயணிகள்தான் பயன்படுத்தப்படுகின்றனர். ‘இந்த பொருளை அல்லது பார்சலை இறங்கியதும் இவரிடம் கொடுத்து விடுங்கள்’ என கூறி அனுப்புகின்றனர். பிடிபட்ட பிறகுதான், தாங்கள் தங்கம் கடத்தியதே அவர்களுக்கு தெரிகிறது.

* மியான்மர், இலங்கையில் இருந்து கடல் மற்றும் சாலை வழியாகவும் சில சமயம் கடத்தப்படுகிறது.

* கடத்தலையே தொழிலாக வைத்திருப்பவர்கள் பலர், தங்கத்தை கேப்சூல் போன்று விழுங்கியும், வீட்டு உபயோக பொருட்களில் மறைத்தும், துகள்கள், பேஸ்ட் உட்பட பல வடிவங்களில் கடத்துகின்றனர்.

* பிடிபடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மூலம்தான் அதிகம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும்  விலை

கடந்த 1990ல் தொடங்கி கடந்த ஜூலை மாதம் வரை ஏறக்குறைய 10 முறை இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தின்படி, கடந்த 1990-91ல் 7.21 சதவீதம் இறக்குமதி வரி இருந்தபோது, 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.3,452 ஆக இருந்தது.

* 2008-09ல் வரி 0.8 சதவீதமாக குறைக்கப்பட்டபோது தங்கம் விலை ரூ.12,500 ஆக இருந்தது.

* பின்னர் 2011ல் ரூ.19,566 முதல் ரூ.29,369 வரை காணப்பட்டது. 2019ம் ஆண்டு வரை பெரிய அளவில் விலை மாற்றம் இல்லை.

* ஆனால், 2020ல் 10 கிராம் தங்கம் ரூ.38,280 முதல் ரூ.56,091 வரை இருந்தது.

* தற்போது 15 சதவீதம் வரி உள்ள நிலையில், 10 கிராம் தங்கம் விலை ரூ.52,266 வரை உயர்ந்துள்ளது.

* கடந்த 1990-91 ல் 10 கிராமுக்கு ரூ.250, 2008-09ல் 10 கிராமுக்கு ரூ.100 வரி செலுத்தப்பட்டது.

* இறக்குமதி வரி 15% 2012-2022 ஜூன் வரை பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.9,666 கோடி

* ஆண்டு தோறும் இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1.62 லட்சம் கோடி

Related Stories: