கேரள தேசத்தில் இருந்து வந்து கலக்கிய குட்டிச்சாத்தான்

மை டியர் குட்டிச்சாத்தான் 1984 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தை ஜிஜோ பொன்னூஸ் இயக்க, நவோதையா ஸ்டுடியோ நிறுவனத்தின் கீழ் நவோதயா அப்பச்சனால் தயாரிக்கப்பட்டது. 3டி வடிவில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு ரகுநாத் பலேரி திரைக்கதை அமைத்துள்ளார். தீய மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் குட்டிச்சாத்தன் என்ற மாய சக்தியைச் சுற்றி இக்கதை வருகிறது.

அது மந்திரவாதியிடமிருந்து மூன்று குழந்தைகளால் விடுவிக்கப்பட்டு, அவர்களுடன் நட்பு கொள்கிறது. படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் முறையே அசோக் குமார், டி. ஆர். சேகர் ஆகியோர் மேற்கொண்டனர். இப்படத்தின் வழியாக ஜெகதீஷ் மற்றும் ஜைனுதீன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாயினர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ.2.5 கோடிக்கு மேல் வசூலித்தது. முதலில் மலையாளத்தில் படமாக்கப்பட்ட இப்படம், தமிழிலும் டப்பிங் செய்து வெளியானது.

இதன் மறு படத்தொகுப்பு செய்யப்பட்ட பதிப்பு 1997ல் மீண்டும் வெளியிடப்பட்டது. இது மலையாளத்தின் முதல் டிடிஎஸ் படமாகும். இது 1998ல் இந்தியில் சோட்டா சேட்டன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தியில் ரூ.1.30 கோடி வசூலித்து வெற்றியும் பெற்றது. ஊர்மிளா மடோன்ட்கர் இடம்பெற்ற காட்சிகள் பின்னர் சேர்க்கப்பட்டன. 2010ம் ஆண்டில், பிரகாஷ் ராஜ் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்த காட்சிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தமிழில் சுட்டி சாத்தான் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 25 ஆகஸ்ட் 2011 அன்று கூடுதல் காட்சிகளுடன் புதிய மறு-முதன்மைப் பதிப்பு வெளியானது.

முக்கியமாக தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் வழிபடப்படும் ‘சாத்தான்’ என்று பிரபலமாக அறியப்படும் ஒரு தெய்வத்தின் சிறப்புகளை அடிப்படையாகக் கொண்டு குட்டிச்சாத்தன் என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கொடூரமான மந்திரவாதிகளில் ஒருவரான கரிம்பூதம் என்பவர் கண்ணுக்குத் தெரியாத ஆவி ஒன்றை தனது மந்திரங்களால் அடிமைப்படுத்துகிறார். அதை அவர் ‘குட்டிச்சாத்தான்’ என்று அழைக்கிறார். இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் குட்டிச்சாத்தனுடன் தற்செயலாக நட்பு கொள்கின்றனர். மேலும் மந்திரவாதியின் பிடியில் இருந்து அதை விடுவிக்கின்றனர்.

இந்த சாத்தன் குழந்தைகளுடன் நட்பாக பழகிறது. அது ஒரு நல்ல நண்பன் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிறுமி இரண்டு காரணங்களால் குட்டிச்சாத்தனை தனது வீட்டில் வைத்துக்கொள்வதாக உறுதியளிக்கிறாள்: ஒன்று, அவளுடைய தந்தை அளவுக்கு அதிகமாக குடிப்பவர், அதனால் அவள் மந்திர சக்தியுடைய சாத்தனைக் கொண்டு தன் தந்தையைத் திருத்த விரும்புகிறாள், ஏனெனில் அவளுடைய தாய் இறந்த பிறகு, அவரைக் கட்டுப்படுத்துபவர் யாரும் இல்லை;

இரண்டாவதாக, சாத்தன், சிறு பையன் உருவத்தில் இருந்தாலும் நிறைய குடிக்கக்கூடியது. அவள் தந்தை குடிப்பதை எல்லாம் அது குடித்து முடித்துவிடும், அதன் மூலம் அவளுடைய தந்தையின் அணுகுமுறையை மாற்றம் வரும் என எண்ணுகிறாள். அதே நேரத்தில், குட்டிச்சாத்தனை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர கொடூர மந்திரவாதி விரும்புகிறார். மந்திரவாதி குட்டிச்சாத்தானின் உரிமையாளராக இருந்தாலும், இறுதியில் சாத்தனால் எரித்து கொல்லப்படுகிறார்.

சாத்தான் பின்னர் ஒரு வௌவாலாக மாறி பறந்து செல்கிறது. அப்பச்சனின் மகன் ஜிஜோ பொன்னூஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படையோட்டம் (1982) படத்திற்குப் பிறகு, ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு எழுதிய ‘அமெரிக்கன் சினிமோட்டகிராப்பர்’ என்ற கட்டுரையைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்ட ஜிஜோ 3டி படத்தை இயக்க முடிவு செய்தார். தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ள, ஜிஜோ கலிபோர்னியாவின் பர்பாங்கிற்கு பலமுறை பயணம் செய்து 3டி படங்களின் மாதிரி படச்சுருள்களை வாங்கி தனது படப்பிடிப்பு வளாகத்தில் முன்னோட்டம் பார்த்தார்.

அதைக்கண்டு நம்பிக்கைக் கொண்ட அப்பச்சன் இந்தப் படத்தை 40 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்க முடிவு செய்தார். லண்டனை சேர்ந்த டேவிட் ஷ்மியர் என்பவர் படத்தின் ஒளிப்பதிவாளருடன் இணைந்து 3டி பணிகளுக்காக வேலை பார்த்தார். ஜிஜோ மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு அவர் 3டி தொழில்நுட்பத்தில் நிபுணரான கிறிஸ் காண்டனை சந்தித்தார். ஜிஜோ சிறப்பு கேமராவை வாங்கினார், நீண்ட விவாதத்திற்குப் பிறகு கிறிஸ் இந்தப் படத்தில் ஜிஜோவுக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

ஜிஜோ தனது நண்பரான தாமஸ் ஜே ஈசாவின் உதவியுடன் படத்திற்குத் தேவையான உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார். 3டி படத்திற்கு, குழந்தைகளை கவரும் வகையில் உலகளாவிய ஒரு கருப்பொருளைக் கொண்டு படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் விரும்பினர். நட்பான பேய் என்ற கருப்பொருளை ஜிஜோ பல ஆண்டுகளாக சிந்தித்துவந்தார். அவர் படத்தின் எழுத்துப் பணிக்காக அனந்த் பாய், பத்மராஜன் போன்றவர்களின் கருத்தைக் கேட்டார்.

ரகுநாத் பலேரி படத்தின் எழுத்தாளராக வந்து, நிபுணர்களிடமிருந்து வந்த அனைத்து கருத்துகளையும் உள்வாங்கி மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு குட்டிச்சாத்தான் உள்ள ஒரு கதையை உருவாக்கினார். இதில் சோனியா போஸ், எம்.டி. ராம்நாத் ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக இடம்பெற்றனர். எம். டி. ராம்நாத் குறிப்பிடதக்க வேடத்தை ஏற்றிருந்தார். அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். இதன்மூலம் 3டி படத்தை எடுத்த இந்தியாவின் முதல் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிரபல இயக்குனராக வலம் வந்த டி.கே. ராஜீவ் குமார், இந்தப் படத்தின் மூலம் உதவி இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1997ல் எடுக்கப்பட்ட இந்தி பதிப்பில், சக்தி கபூர் மந்திரவாதி பாத்திரத்தில் நடித்தார் (முதலில் ஆலும்மூடன் நடித்தார்), அவர் சைத்தானை பிடிக்க முயற்சிக்கிறார், ஆனால் கண்ணாடியில் சிக்கிக் கொள்கிறார். 2010 இல் வெளியான இதன் மறு வெளியீட்டுத் தமிழ்ப் பதிப்பில் பிரகாஷ் ராஜ் இந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

ஜெகதே சிறீகுமாரின் வேடத்தில் சதீசு கௌசிக் ஒரு விஞ்ஞானியாக நடித்தார். அவர் சைத்தானைப் பிடிக்க முயல்கிறார், ஆனால் அழிக்கப்படுகிறார். இந்த கதாபாத்திரத்தை 2010 பதிப்பில் சந்தானம் ஏற்று நடித்தார். படத்தில் இடம்பெற்ற சுவரில் நடந்து செல்லும் புகழ்பெற்ற காட்சிக்காக கே. சேகரும், ஜிஜோயும் 3டி காட்சிக்கு தோதாக செவ்வக வடிவ சுழலும் அறையை உருவாக்க முடிவு செய்தனர். மரத்தினால் அமைக்கபட்ட அறையின் மீது எஃகு அமைப்பைக் கட்டும் பணியை சில்க் (ஸ்டீல் இண்டஸ்ட்ரியல் கேரளா) என்ற நிறுவனத்திடம் ஜிஜோ, ஒப்படைத்தார். 25 டன் எடை கொண்ட எண்கோண அமைப்பான அறை, ஒரு மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

குழந்தைகள் அறையைச் சுற்றி 360 பாகையில் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க இருபுறமும் ஆறுபேர் அதைச் சுழற்றினர். மூல மலையாளப் படம் ரூ. 35 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. இப்படம் 1984ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட பதிப்புகளுடன் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளுக்கு முறையே சின்னாரி சேதனா மற்றும் சோட்டா சேத்தன் என்று பெயரிடப்பட்டன. அனைத்து பதிப்புகளும் வெற்றி பெற்றன.

காட்சி அனுபவத்திற்காக, திரையரங்குகளில் உள்ள படமெறிகருவிகளில் சிறப்பு வில்லைகள் இணைக்கப்பட்டன. இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த மலையாளப் படமாக ஆனது. இது ரூ.2.5 கோடி வசூல் ஈட்டியது. மேலும் இதன் இந்தி மொழிமாற்றப் பதிப்பான சோட்டா சேட்டன் ரூ.1.3 கோடி வசூலித்தது. இப்படம் திருவனந்தபுரத்தில் 365 நாட்களும், சென்னை மற்றும் மும்பையில் 250 நாட்களும், பெங்களூர், ஐதராபாத்தில் 150 நாட்களும் ஓடியது.

* தமிழிலும் கலக்கல்
கேரளத்தில் பட விநியோகத்தை நவோதயா செய்தார். இப்படத்தின் தமிழ் பதிப்பு விநியோகத்தை பிரபல இயக்குனர் கேயார் மேற்கொண்டார். தமிழ்ப் பதிப்பும் பெரிய செலவில் எடுக்கப்பட்ட படங்களையும் தாண்டி வசூல் ஈட்டி வெற்றி பெற்றது.

* பரவிய பீதி
படத்தை பார்க்க 3டி மூக்குக் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுவதால் விழி வெண்படல அழற்சி பரவுகிறது என்ற வதந்தி பரவியது, அப்போது ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் பரவியதால் மக்கள் மூக்குக் கண்ணாடி அணியத் தயங்கினர். இதனால் படம் தொடங்கும் முன், 3டி கண்ணாடியை எப்படி பயன்படுத்துவது என்றும், கண்ணாடிகளை ஒவ்வொரு காட்யிலும் பயன்படுத்தி முடித்த பிறகு எவ்வாறு தூய்மை படுத்தப்படுகிறது என்பது குறித்து அப்போதைய பிரபல நடிகர்களான பிரேம் நசீர், அமிதாப் பச்சன், ஜீதேந்திரா, ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பலர் விளக்கிய காட்சிகளை எடுத்து தயாரிப்பாளர்கள் படத்தில் சேர்த்தனர்.

* 90 நாள் படப்பிடிப்பு
சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பு நடத்தியபோதும், படப்பிடிப்பை முடிக்க சுமார் 90 நாட்கள் ஆனது. இது அப்போதைய ஒரு சாதாரண படத்தின் படப்பிடிப்புக் காலத்தை விட மூன்று மடங்கு ஆகும். ஒளியமைப்பிற்கான செலவு 2டி படத்தை விட அதிகமாக இருந்தது. நவோதயா ஸ்டுடியோவிலும், காக்கநாடு பகுதியைச் சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘ஆழிப்பழம் பெருக்க’ (தமிழ்ப் பதிப்பில்: சின்னக் குழந்தைகளே) பாடல் படப்பிடிப்பு முடிக்க 14 நாட்கள் ஆனது.

The post கேரள தேசத்தில் இருந்து வந்து கலக்கிய குட்டிச்சாத்தான் appeared first on Dinakaran.

Related Stories: