ரிசர்வேஷன் பெட்டிகளில் 500 வடமாநிலத்தவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம்: முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தர மறுப்பு, திருவொற்றியூரில் இறக்கி விட்டதால் பரபரப்பு

சென்னை: திருவொற்றியூரில் அசாம் மாநிலம் செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் இல்லாமலும், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுடனும் பயணம் செய்த வடமாநிலத்தவர்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை கொடுக்க மறுத்ததால் பிரச்னை வெடித்தது. இதையடுத்து, 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவிகளின் சாரணர் இயக்கம் மற்றும் என்சிசி படையை சேர்ந்தவர்களுக்கு டான் போஸ்கோ யுனிவர்சிட்டி நடத்தும் 15வது அனைத்திந்திய போஸ்கோரி போட்டி நடக்கிறது. இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கின்றனர்.

சென்னை பெரம்பூர், திருவொற்றியூர் பகுதியில் இருந்தும் பங்கேற்பதற்காக சுமார் 250 சாரணர் இயக்க மற்றும் என்சிசி மாணவ, மாணவிகளின் ஒரு பிரிவினர் நேற்று புறப்பட்டனர்.

இதற்காக, பெங்களூருவில் இருந்து வந்த நியூ தின்சுகியா  விரைவு ரயிலில் பெரம்பூரில் இருந்து 200 மாணவ, மாணவிகள் ஏறினர். இந்த விரைவு ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10.10 மணிக்கு திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. இங்கு சுமார் 36 மாணவர்கள் அதில் ஏற இருந்தனர்.

அப்போது, ரயில் பெட்டிகளில் உறுதி செய்யப்படாத (வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகளுடனும், டிக்கெட் எதுவும் இல்லாமலும் வடமாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் மாணவ, மாணவிகளுக்காக உறுதி செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இதனால் மாணவ, மாணவிகள் இருக்கை இல்லாமல் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கான இருக்கையை ஒதுக்க முடியாது என்று மாணவ, மாணவிகளிடம் வட மாநிலத்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்த தண்டையார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திலீப், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் ஆய்வாளர் கோவிந்தராஜ், திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் காதர் மொய்தீன் ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட போலீசார் திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு உறுதி செய்யப்படாத இருக்கையில் அமர்ந்திருந்த 500க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்களை கீழே இறக்கிவிட்டு, அந்த இருக்கைகளில் சாரணர் இயக்கம் மற்றும் என்சிசி மாணவ, மாணவிகளை அமர வைத்தனர். அதன் பின்னர் 11.43 மணிக்கு ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: