திருவட்டார் அருகே பரபரப்பு; பரளியாற்றில் குளித்த மெக்கானிக் மாயம்: நீர்சுழலில் சிக்கினாரா? தேடும் பணி தீவிரம்

குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான பரளியாறு திருவட்டார் வழியாக ஆதிகேசவ பெருமாள் கோயில் பகுதியை கடந்து பாய்ந்து செல்கிறது. இந்த கோயிலில் இருந்து ஆற்றூர் கழுவன்திட்டை பகுதிக்கு செல்லும் சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் கோயில் ஆராட்டு விழாவின்போது சுவாமி சிலைகள் கொண்டு செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த பாலம் கடுமையாக சேதமடைந்தது.

தற்போது தற்காலிகமாக பாலம் சரி செய்யப்பட்டிருந்தாலும், இந்த பகுதி ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஆனாலும் சிலர் இந்த பாலம் அருகேயுள்ள படித்துறையில் தினமும் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று திருவட்டார் கொச்சுக்குட்டன்மேடு பகுதியை சேர்ந்த மதுசூதன நாயர் (52) என்பவர் படித்துறையில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். நீண்டநேரம் அவரை காணாததால் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி, மாயமான மதுசூதன நாயரை தேடி வருகின்றனர். இந்த ஆற்று பகுதியில் நீர்சுழல் உள்ளது. இதனால் முதியவர் நீர்சுழலில் சிக்கினாரா? எனவும் தேடி வருகின்றனர். பைக் மெக்கானிக்கான மதுசூதன நாயருக்கு லீலா என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக மதுசூதன நாயர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: