திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க அனுமதி மறுப்பு: பாத யாத்திரை பக்தர்கள் மறியல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாத யாத்திரையாக வந்த பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்காததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்கள் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்களை தரிசனம் செய்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் திருமலையில் உள்ள எஸ்.வி. அருங்காட்சியகத்தின் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், மறியலை கைவிடும்படி பக்தர்களிடம் கூறினர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத பக்தர்கள், விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பக்தர்கள், ‘பகல் 12 மணிக்கு தரிசனத்திற்கு சென்றபோது, மாலையில் தரிசனத்திற்கு அனுமதிப்பதாக கூறினர். பின்னர் மாலை நேரத்தில் சென்றபோது, இரவு தரிசனம் செய்து வைக்கப்படும் என்றனர். ஆனால் இரவு சென்றபோதும் தரிசனம் கிடையாது எனக்கூறுகின்றனர். விஐபிக்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் முன்னுரிமை அளிக்கிறது.

எனவேதான் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்’ என ஆவேசமாக தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் சுமார் ஒரு 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக செல்லும் வரிசையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதித்தனர். இதையடுத்து அவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Related Stories: