நெருங்கும் பொங்கல் பண்டிகை வாடியில் விளையாட தயாராகும் காளைகள்

*ஆண்டிபட்டி பகுதியில் பயிற்சி அளிக்கும் பணி தீவிரம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளை மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அருகே அலங்காநல்லூர், பாலமேடு, காரியாபட்டி, அவனியாபுரம் பகுதிகளிலும், தேனி மாவட்டம் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூர் பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் அழைத்து வரப்பட்டு போட்டிகளில் பங்கேற்க செய்கின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், குன்னூர், ஏத்தக்கோவில், டி.ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யோக பயிற்சிகள் அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்கும் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண் குவியலில் கொம்பு மூலம் முட்டும் பயிற்சி, காளைகளை நீளமான கயிறுகளில் கட்டி முட்டும் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காங்கேயம், தேனி மலைமாடு உள்பட 8 வகையான ஜல்லிக்கட்டு மாடுகள் இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் இதுவரை பல்வேறு பரிசுகளை பெற்று உள்ளதாகவும், இந்த ஆண்டும் பரிசுகள் பெறும் வகையில் பயிற்சி அளித்து வருகிறோம் என்று காளை வளர்ப்பவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். மேலும் போட்டியில் கலந்து கொள்ள ஜல்லிக்கட்டு வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெறும் காளைகளுக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: