ராசிபுரம் அருகே மண் அடுப்பு தயாரித்து விற்று பிழைக்கும் 82 வயது மூதாட்டி

ராசிபுரம் : ராசிபுரம் அருகே தள்ளாத வயதிலும் பாரம்பரியம் மிக்க மண் அடுப்புகளை தயாரித்து விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு மூதாட்டி ஜீவனம் நடத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. இம்மாவட்டத்தின் ஒரு பகுதியில் காவிரி ஆறு பாய்ந்தாலும், பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் அடுத்துள்ள அளவாய்ப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பாவாயி(82).

இவர், தள்ளாத வயதிலும் தினசரி மண் அடுப்புகளை தயாரித்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு ஜீவனம் நடத்தி வருகிறார். இவரது கணவர், கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். மகன்கள் 3 பேரில், ஒருவர் கொரோனா காலத்தின்போது உயிரிழந்து விட்டார். மற்றொருவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். கடைசி மகன், கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகிறார். அவருக்கு பாரமாக இருக்க விரும்பாத பாவாயி, தனது தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்கிறார்.

தினமும் பொழுது புலர்ந்ததும், முதல் வேலையாக மண் எடுப்பு தயாரிப்பில் உட்கார்ந்து விடுகிறார். இதற்கு தேவையான களிமண்ணை முந்தின நாள் இரவே, நன்கு பிசைந்து வைத்து விடுகிறார். தினசரி 4 அடுப்புகள் வரை தயாரிக்கிறார். அந்த பணி முடிந்ததும், உணவு எடுத்துக் கொள்கிறார். தொடர்ந்து பானைகளை காய வைப்பது, சுட்டு எடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பாவாயி, இடையில் அடுப்பு கேட்டு வருபவர்களுக்கு, விற்பனை செய்கிறார்.

ஒரு அடுப்புக்கு ₹100 வரை பெற்றுக் கொள்கிறார். அந்த பணத்தை கொண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார். தள்ளாத வயதிலும் அடுப்பு தயாரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஜீவனம் நடத்தி வரும் பாவாயிக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அக்கம்- பக்கம் ஊர்களிலிருந்து வந்து பாவாயியிடம் அடுப்பு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாரத்தில் ஒரு நாள் விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிடும் முறைக்கு மாறி விட்டதாக தெரிவிக்கின்றனர்.

Related Stories: