நேபாள புதிய பிரதமராக பிரச்சண்டா நியமனம்

காத்மாண்டு: நேபாள புதிய பிரதமராக சிபிஎன் மாவோயிஸ்ட் சென்டர் பிரச்சண்டா நியமிக்கப்பட்டுள்ளார். நேபாள நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்தது.  மொத்தம் 275 எம்பி.க்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதில், 89 இடங்களை வென்ற நேபாள காங்கிரஸ்  தனிப்பெரும் கட்சியாக உள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளான (சிபிஎன்-யுஎம்எல்) 78 மற்றும் சிபிஎன்-மாவோயிஸ்ட் சென்டர் 32 இடங்களையும் பிடித்துள்ளன.

நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 5 கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. இதில் பிரதமர் மற்றும் அதிபர் பதவியை கேட்டு நேபாள காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தது. ஆனால் இதற்கு ஒத்துழைக்காத சிபிஎன் மாவோயிஸ்ட் சென்டர் தலைவர் புஷ்ப கமல் தகால் என்ற பிரச்சண்டா கூட்டணியில் இருந்து வெளியேறினார். அரசு அமைப்பது குறித்த பேச்சு தோல்வி ஏற்பட்டதால் பிரச்சண்டா   சிபிஎன்-யுஎம்எல் தலைவர் கே.பி.சர்மாவை சந்தித்து ஆதரவு கோரினார்.

அவரது கட்சி உள்பட  வேறு சில சிறிய கட்சிகளும் பிரச்சண்டாவை ஆதரிக்கின்றன. இந்நிலையில்,பிரச்சண்டாவை புதிய பிரதமராக நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி நியமித்துள்ளார். அவர் மூன்றாவது முறையாக பிரதமராக  பதவியேற்க உள்ளார்.

Related Stories: