ராயபுரம் சிங்காரவேலர் நகரில் பழுதடைந்த குடியிருப்புகளில் ரூ.2 கோடியில் சீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட செட்டி தோட்டம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றவிட்டு, அங்கு, புதிதாக 500 குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, அந்த குடியிருப்பில் வசித்தவர்களை காலி செய்து, புதிய குடியிருப்புகள் தயாராகும் வரை அவர்கள் வெளியே வாடகைக்கு தங்குவதற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரவேலர் நகர், பனமரத் தொட்டி காலனி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான 540 அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால், இதை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒப்புதலுடன் ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார். இதில், அடுக்குமாடி குடியிருப்பில் பழுதடைந்துள்ள பால்கனி, கைப்பிடி, சுவரில் விரிசல் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி செயற்பொறியாளர் சுடலை முத்துகுமார் மற்றும் பொதுமக்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: