திருப்பதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

திருமலை: திருப்பதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அதை காட்டில் விட்டனர். திருப்பதியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இந்த சிறுத்தை  பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு நாயை அடித்து சாப்பிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் எழுப்பியுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 2 தினங்களுக்கு முன்பு குட்டியுடன் ஒரு சிறுத்தை சாலையை கடந்தது. அப்போது வாகனம் மோதி சிறுத்தைக்குட்டி உயிரிழந்தது.

இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் நடமாடவேண்டாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பின்புறம் உள்ள வனப்பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக 2 இடங்களில், கூண்டு வைத்து அதில் நாயை கட்டி வைத்து 6 இடங்களில் கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை ஒரு கூண்டில் சிறுத்தை சிக்கிக்கொண்டது. கூண்டில் 2 அறைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு அறையில் கட்டப்பட்டிருந்த நாய் பாதுகாப்பாக இருந்தது. சிறுத்தை சிக்கிக்கொண்டதை கண்ட வனத்துறையினர் சம்பவ இடம் சென்று சிறுத்தையை மீட்டு திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவில் விட்டனர். மேலும், அந்த சிறுத்தை சேஷாச்சல  வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடர்ந்த காட்டில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரி சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

Related Stories: