முதல்வர் உத்தரவின்படி ரூ.200 கோடி மதிப்பீட்டில் பழநி கோயிலை மேம்படுத்திடும் வகையில் பெருந்திட்ட வரைவு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இன்று (25.12.2022) நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழாவிற்கான பந்தக்கால் நடும்விழாவில்  உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்ததோடு, திருக்கோயிலில் சித்த மருத்துவமனை,  இராஜகோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணி, பித்தளையால் அமைக்கப்படும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, பக்தர்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி கார்களையும் வழங்கினார்கள். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை பிரசித்தி பெற்றதாகும். பழனி மலையில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர்களின் ஜீவசமாதிகளும் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகைதந்து சுவாமியின் அருள் பெற்று செல்வார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு வருகின்ற 27.01.2023 அன்று நடைபெறவுள்ளது. அதனையொட்டி இன்று (25.12.2022) நடைபெற்ற பந்தக்கால் நடும்விழாவில் உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தோடு, வேலவன் விடுதி வளாகத்தில் திருக்கோயில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து ரூ. 22 இலட்சம் மதிப்பீட்டில் மலைக்கோயில் இராஜகோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணிகள், ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் மலைக்கோயில் நீராழி பத்தி மண்டபத்தினைச் சுற்றிலும் தற்போதுள்ள இரும்பு  மற்றும் எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகளுக்கு பதிலாக திருக்கோயில் அமைப்பிற்கேற்றவாறு பித்தளையிலான தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள் அமைத்தல், ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் நீராழி பத்தி மண்டபத்திற்கும் , மகா மண்டபத்திற்கும் இடையில் இரும்பிலான தடுப்பு வேலிகளை அகற்றி பித்தளை கம்பி வேலி அமைத்தல், ரூ. 9 இலட்சம் மதிப்பீட்டில் தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலியினை அகற்றி பித்தளையிலான பாதுகாப்பு வேலியினை அமைத்தல் ஆகிய திருப்பணிகளை தொடங்கி வைத்து, ரோப் கார் கீழ் நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரி கார்)  அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கு 2019 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு, இடையில் தொய்வு ஏற்பட்டதனை அறிந்த  முதலமைச்சர்   அப்பணிகளை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்கள்.  அதனைத் தொடர்ந்து நானும், இந்த மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்கள், துறை உயர் அலுவலர்கள் ஒருங்கிணைந்து இதுவரை 4 முறை நேரில் ஆய்வு செய்து திருப்பணிகளை விரைவுபடுத்திய காரணத்தினால்  இத்திருக்கோயிலுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி குடமுழுக்கு  நடைபெற உள்ளது. இத்திருக்கோயிலில் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் கருங்கல் மற்றும் கட்டுமான பணிகளும், ரூ.5 கோடி மதிப்பீட்டில் தங்கம் மற்றும் வெள்ளியிலான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருக்கோயில் நிதியின் மூலம் 26 பணிகளும், உபயதாரர்கள் நிதியின் மூலம் 62 பணிகளும் ஒட்டுமொத்தமாக 88 பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதனால் குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். இத்திருக்கோயிலுக்கு 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  ஆகம விதிப்படி  2018  ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய குடமுழுக்கு 4 ஆண்டுகள் கடந்து நடந்தாலும் திருப்பணிகள் நேர்த்தியாகவும்,  எந்த விதமான தவறுக்கும் இடம் தராமலும்,  வெளிப்படைத்தன்மையோடும் எட்டுக்கால் பாய்ச்சலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனை அனைவரும் பாராட்டுகின்றபோது இந்த பணியிலே ஈடுபட்டு இருக்கின்ற அறங்காவலர்களும், அலுவலர்களும் மகிழ்ச்சி அடைந்து இன்னும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி  சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சராசரியாக ஆண்டிற்கு ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவதாலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு ஒன்றை ஏற்படுத்த  முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். இதற்கான அனைத்து பணிகளும்   முழு வீச்சில்  நடைபெற்று வருகின்றன.  அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெருந்திட்ட வரைவு (மாஸ்டர் பிளான்)  இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இத்திருக்கோயிலுக்கு பெருந்திட்ட வரைவை செயல்படுத்துகின்றபோது ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றபோது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தருகின்ற திட்டத்தையும் வகுத்திருக்கின்றோம்.

ஆகவே பெருந்திட்ட வரைவு செயலாகத்திற்கு வருகின்ற போது இத்திருக்கோயில் திருப்பதிக்கு இணையாக திகழும். திருக்கோயில்களுக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடைவிதிக்க  வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்றுவோம்.  திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களிலும் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் கோரிக்கை குறித்து  முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் ஒவ்வொரு பணியாளருக்கும்  ரூபாய் 8,000 முதல் 10,000 வரை முதற்கட்டமாக சம்பள உயர்வை வழங்க  உத்தரவிட்டிருக்கின்றார்கள்.  இதன் மூலம்  400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவர். அவர்களை நிரந்தர பணியாளர்கள் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றை பொறுத்தளவில் குடமுழுக்குக்கு  முன்பு நிலவுகின்ற சூழ்நிலையை பொறுத்து நிர்வாகம் எங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கும்.

குடமுழுக்கின் போது பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்குதரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், .  அனுமதிச் சீட்டு (பாஸ்) தொடர்பாக அறங்காவலர் குழு முடிவின்படி, மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தும் முடிவெடுக்கப்படும். ரோப் கார் இயக்கப் பணிகளுக்கு  நிரந்தர பணியாளர்களை நியமிக்க பரிந்துரைத்துள்ள அறங்காவலர் குழு முடிவின்படி விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திருக்கோயிலில் ஆகமங்களுக்கு மாறாக ஒரு பணியும் நடைபெறாது. நேர்மறை கருத்துக்களை விட எதிர்மறை கருத்துக்கள் தான் ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன.  தெய்வத்திற்கு உகந்த வகையில் ஆகம விதிகளை முழுமையாக கடைபிடித்து, எதிர்ப்பவர்களும், வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற வகையில் இந்த குடமுழுக்கு இனிதே நடந்தேறும். திருக்கோயில்களின் சார்பில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன அதில்  20க்கும் மேற்பட்ட யானைகளுக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டிருக்கின்றன.  அனைத்து யானைகளுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையும்,  நடை பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடும் மருத்துவர்களின் ஆலோசனையோடு தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.   மனிதர்கள் மட்டுமல்லாமல், திருக்கோயிலில் இருக்கின்ற ஜீவராசிகளும் ஆனந்தமாக இருக்கின்ற ஒரு ஆட்சியாக  தமிழக முதல்வரின் ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

Related Stories: