9 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கு மத்தியில் பாஜகவின் 2024ம் ஆண்டின் ‘பிளான் 160’ என்ன? பாட்னாவை தொடர்ந்து ஐதராபாத்தில் 28ல் முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: அடுத்தாண்டு நடைபெறவுள்ள 9 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கு மத்தியில் அடுத்தாண்டுக்கான ‘பிளான் 160’ என்ற திட்டத்திலும் பாஜக தலைமை கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக பாட்னா, ஐதராபாத்தில் அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி வருகிறது. தேர்தல்களை மையப்படுத்தி தினசரி அரசியலை முன்னெடுத்து வரும் பாஜக, தற்போது 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வியூகங்களையும் நடத்தி வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் 160 மக்களவை தொகுதிகளை தேர்வு செய்து, அந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசித்து வருகிறது. காரணம் மேற்கண்ட 160 தொகுதிகளும் கடந்த 2019ல் நடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகள் ஆகும்.

அந்தப் பட்டியலில் உள்ள தொகுதிகள் மேற்குவங்கம், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளன. 2019ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா, பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதால், தற்போது பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியாக உள்ளதால், சிவசேனாவுடன் வென்ற பல இடங்களை தற்போது இழக்க நேரிடும் என்று பாஜக கருதுகிறது. அதனால் அந்த தொகுதிகளிலும் பாஜக தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதுதவிர, பீகாரில் ஜஞ்சர்பூர், முங்கர், கிஷன்கஞ்ச் போன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக, அந்த ெதாகுதிகளின் மேற்பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தோல்வி பட்டியலில் உள்ள தொகுதிகளில் 40 பொதுக்கூட்டங்களை பிரதமர் மோடி நடத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான பிரசார வேலைகளை அடுத்தாண்டு மத்திய பகுதியில் இருந்து பாஜக தொடங்கவுள்ளது. அதன்படி கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பீகார் தலைநகர் பாட்னாவில்  பாஜகவின் தேசிய தேர்தல் குழுவின் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், ெவற்றிவாய்ப்பை இழந்த 100 ெதாகுதிகளுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. தொடர்ந்து வரும் 28ம் தேதி முதல் ஐதராபாத்தில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மீதமுள்ள 60  தொகுதிகளுக்கான வியூக கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை கட்சியின் அமைப்பு  பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நடத்தி வருகிறார். எனவே அடுத்தாண்டு 9 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வியூகங்களுக்கு மத்தியில், தோற்றுப்போன 160 எம்பி தொகுதிகளுக்கான வியூகங்களையும் தலைமை வகுத்து வருவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: