ராணிப்பேட்டை- அம்மூர் நெடுஞ்சாலையில் சிஎன்ஜி கேஸ் பைப்லைன் புதைக்கும் பணியில் ஏற்பட்ட திடீர் பள்ளம்-போக்குவரத்து பாதிப்பு

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை- அம்மூர் நெடுஞ்சாலையில் சிஎன்ஜி கேஸ் பைப்புகள் புதைக்கும் பணிகள் மேற்கொண்ட போது நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் சிஎன்ஜி கேஸ் நிறுவனம் பைப்லைன் புதைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ராணிப்பேட்டை-அம்மூர் நெடுஞ்சாலையில் மாந்தாங்கல் கிராமத்திலிருந்து செதுவாலை வரை சிஎன்ஜி கேஸ் பைப்புகள் புதைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை- அம்மூர்  நெடுஞ்சாலையில் சீனிவாசன்பேட்டை அருகில் கேஸ் பைப்புகள் புதைக்க பம்பிங் பணிகள் நடந்து கொண்டு இருந்தபோது திடீர் என பள்ளம் ஏற்பட்டது.

இதனால் நேற்று மாலை ராணிப்பேட்டை- அம்மூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலாஜி, உதவி பொறியாளர் நித்தின் ஆகியோர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், இது குறித்து வாலாஜா நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலாஜி கூறியதாவது, சம்பந்தப்பட்ட மாந்தாங்கல் பகுதியில் உள்ள சிஎன்ஜி கேஸ் பைப் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைப்பு செய்து சீரான நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக இன்று (நேற்று) இரவே அனைத்து பணிகளையும் முடித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். அவர்கள் உடனடியாக பணிகளை செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: