காலத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் பரதக்கலை: வடசென்னையில் அதிகரிக்கும் பரத நாட்டிய பள்ளிகள்

ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்த கலையை கற்று வந்தனர். ஆனால், இன்று அதனை முறியடிக்கும் வகையில் நாகரீக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்களின் செயல்பாட்டால் பரதநாட்டியம் என்பது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் ஒரு பொதுவான கலை என பார்க்கப்படுகிறது. உலகத்தில் ஒவ்வொரு நாடுகளுக்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கலாச்சாரம் உண்டு. அந்த கலாச்சாரத்தை சார்ந்து மொழி, நடனம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவை அமையும். காலப்போக்கில் சில மொழிகள், சில நடனங்கள், சில கலாச்சாரங்கள் அழிந்துவிடும்.

ஒருசில கலாச்சாரங்கள் வழியே தொன்று தொட்டு தொடர்ந்து மக்கள் அதனை சார்ந்து வாழ்ந்து வருவர். அந்த வகையில், தமிழர்களின் கலாச்சாரம் என்று போற்றி புகழப்பட்ட கலைகளில் பரதக்கலையும் ஒன்று. அந்த கலை தற்போது பல்வேறு பரிணாமங்களை பெற்று உலகம் முழுவதும் இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கலையாக பார்க்கப்படுகிறது. பரதநாட்டியம் என்பது தென்னிந்தியா குறிப்பாக, தமிழ்நாட்டுக்குரிய நடனம் ஆகும். இது மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும், இதன் வரலாறு என்று பார்த்தால் 2000 ஆண்டுகள் என சில குறிப்புகளிலும் பல யுகங்களை தாண்டி என சில குறிப்புகளிலும் உள்ளன.

பரத முனிவரால் உருவாக்கப்பட்ட கலை என்ற காரணத்தினால் பரதம் என்ற பெயர் வந்ததாகவும் இதில் பா என்றால் பாவம், ரா என்றால் ராகம், தா என்றால் தாளம் என்ற மூன்றையும் எடுத்து பரத கலை உண்டானது என்று சில நூல்களில் குறிப்புகள் உள்ளன. இதில், பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும் இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரதநாட்டியம் என கூறப்படுகிறது. பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் நபர்களுக்கு முதலில் அங்க சுத்தம் பற்றி பயிற்றுவிக்கப்படுகிறது. உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தி கொண்டால் எளிதில் நாம் எந்த ஒரு கலைகளையும் கற்றுக் கொள்ளலாம் என்பதன் பொருள்.  

பரதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே குறிக்கும் என்ற நிலை மாறி, தற்பொழுது அனைத்து  சமூகத்தினரும் கற்கும் ஒரு கலையாக உள்ளது. ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்த கலையை கற்று வந்தனர். ஆனால், இன்று அதனை முறியடிக்கும் வகையில் நாகரிக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்களின் செயல்பாட்டால் பரதநாட்டியம் என்பது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் ஒரு பொதுவான கலை என பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலைகள் உண்டு. அந்த வகையில் ஒடிசி, குச்சிப்பிடி, மோகினி ஆட்டம், கதகளி, கதக், சாவோ போன்ற பல கலைகள் பல மாநிலங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளன. ஆனால்  தமிழ்நாட்டின் கலையான பரத கலை உலகம் முழுவதும் இன்று மிகப் பிரபலமாகி உள்ளது.

பல வெளிநாடுகளிலும் இன்று பரதகலை பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பரத கலைக்கு என்று பட்டய படிப்புகளும் உள்ளன. சென்னை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரத கலைக்கு என்று தனியாக பட்ட படிப்புகளும் பல்கலைக்கழகங்களில் இதற்கான படிப்புகளும் உள்ளன. இந்த பரத கலையில் ஆரம்ப காலகட்டத்தில் வழுவூர் ராமையா பிள்ளை மற்றும் அவரது வழித்தோன்றல்களின்படி பாரம்பரிய முறைப்படி இந்த கலை அனைவருக்கும் கற்றுத் தரப்பட்டு வந்தது. நாளடைவில் தற்போது கலாஷேத்ரா பாணியிலும் இந்த கலை பயிற்றுவிக்கப்படுகிறது. கலாஷேத்ரா என்பது இந்திய கலையை குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையை போற்றி வளர்க்கும் பொருட்டு 1936ம் ஆண்டு ருக்மணி தேவி அருண் டேனியலால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கலை கல்லூரி ஆகும்.

தற்போது, இது பல நாடுகளில் வளர்ச்சி அடைந்து தற்போது பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் பெரும்பாலானோர் கலாஷேத்ரா பாணியில் தங்களது நாட்டியத்தை பயின்று வருகின்றனர். வழுவூர் ராமையா பிள்ளை நாட்டிய முறை என்பது பரம்பரை பரம்பரையாக அவர்களது பாணியில் கற்றுக் கொடுத்த ஒரு முறையாக பார்க்கப்படுகிறது. கலாஷேத்ரா முறை என்பது தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப உடல் நெளிவு சுளிவுகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் உள்ளவாறு குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கும் புரியும்படி உள்ள ஒரு நாட்டிய முறையாகும். தற்போது இந்த முறையே அதிகமாக அனைவராலும் கற்றுக் கொள்ளப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை தென் சென்னையில் அதிக மாணவர்கள் இதனை ஒரு காலத்தில் கற்று வந்தனர். அதன்பின்பு மத்திய சென்னை என மாறி தற்போது வட சென்னையில் 150க்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ரூ.300 ரூபாய் முதல் ரூ.1000 வரை மாத கட்டணமாக இவர்களிடமிருந்து பெறப்படுகிறது. காலப்போக்கில் இந்த கலைகள் எல்லாம் அழிந்துவிடும்.  ஒரு சிலரால் எதிர்பார்க்கப்பட்ட கலை காலத்தால் அழியாமல் இன்று வேரூன்றி ஆலமரம் போன்று நிற்கிறது.

மதத்தின் பெயரால் எந்த ஒரு கலையையும் கட்டுக்குள் வைக்க முடியாது என்பதற்கு பரத கலையும் ஒரு சான்று. இதனை மாற்று மதத்தினரும் குறிப்பாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கற்று தேர்ந்து அதில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டுகின்றனர். வசதி படைத்தவர்கள் மட்டுமே பரதநாட்டியம் ஆடுவார்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே இது சொந்தம் என சொந்தம் கொண்டாடப்பட்ட கலை அனைத்து தடைகளையும் தாண்டி தற்போது வடசென்னையை சேர்ந்த  மாணவிகள் அமெரிக்காவில் அரங்கேற்றம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள் என்றால் அதற்கு அந்த கலையின் மீது மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

* வருமானமும்... வேலைவாய்ப்பும்...

வடசென்னை பகுதியில் அதிகமானவர்கள் பரதநாட்டியத்தை பயின்று வருவது குறித்து பெரம்பூர் பகுதியில் கடந்த 56 ஆண்டுகளாக மூன்றாவது தலைமுறையாக சரஸ்வதி கலா கேந்திரா என்ற கலைக்கூடத்தை நடத்தி வரும் கிரண் மையி என்பவர் கூறுகையில், ”பல வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது மேல் தட்டு பிரிவினர் மட்டுமே இந்த கலையை கற்று வந்தனர். ஆனால், இன்று சாதி மதம் பார்க்காமல் பலரும் இந்த கலையை கற்று வருகின்றனர். எங்களது நாட்டிய பள்ளியிலேயே கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என பலர் பயின்று வருகிறார்கள். தற்பொழுது, பல தனியார் பள்ளிகளில் இந்த கலைகள் கற்றுத் தரப்படுகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளிலும் இந்த கலை தற்போது கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை தரும் மாணவிகள் அரசு நிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு வடசென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த நாட்டிய பள்ளிகள் இன்று பெருகிவிட்டன. வடசென்னையில் மட்டும் குறைந்தது 150 பள்ளிகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த கலையை மாணவ, மாணவியர் கற்பதால் மனதை ஒருநிலைப்படுத்துவது, மனவலிமை, உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை மேம்படுகிறது. மேலும், சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கிறது. சமூகத்தில் பல நடனங்கள், பல நாட்டியங்கள் இருந்தாலும், பரதநாட்டியத்திற்கு என்று தனி மரியாதை உண்டு. இந்த கலையை கற்க ஆரம்பித்து 6 மாதம் கழித்து சலங்கை பூஜை செய்யப்படுகிறது. 6 மாதம் இந்த கலையை அவர்கள் சரிவர கற்ற பின்புதான் காலில் சலங்கையையே கட்டுவார்கள். குறைந்தது நான்கு வருடமாவது இந்த கலையை முழுவதுமாக கற்று முடித்த பின்பு அரங்கேற்றம் செய்யப்படுகிறது.

அரங்கேற்றம் என்பது ஒரு டிகிரி வாங்குவது போன்று, அத்துடன் பரதநாட்டியம் முடிந்துவிட்டது என சிலர் நினைத்து விடுவார்கள். ஆனால் அதன் பின்பும் கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது என்பதை பரதநாட்டியம் கற்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது, இந்த கலையால் வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன. முழுமையாக இந்த கலையை பயின்ற பின்பு நாம் இந்த கலையை மற்றவர்களிடம் சொல்லிக் கொடுக்கும்போது அதன் மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது. தற்போது அரசும் பரதநாட்டியதற்கு அதிக  முக்கியத்துவம் தருவதால் அரசாங்க பள்ளிகளுக்கும் நாம் சென்று கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Related Stories: