டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023க்குள் நடத்த வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆளுநர் உரையில் அரசுப்பணிகளில் 10402 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப உறுதி அளிக்கப்பட்ட நிலையில், துறைவாரியான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை. அத்துடன் யுபிஎஸ்சி மற்றும் டின்பிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே, தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை விரைந்து வழங்கிட வேண்டும். மேலும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கான நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ராமதாஸ் வரவேற்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக் குறைந்த பணிகளுக்கு தேர்வு நடத்துவதையும், முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கு தேர்வு நடத்தப்படாததையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதை ஏற்று முதல் தொகுதி தேர்வுகளை சேர்த்து புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டதில் மகிழ்ச்சி.  முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கும், முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம். இதை குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதை டி.என்.பி.எஸ்.சி உறுதி செய்ய வேண்டும்.  இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கும் தேர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: