மழைநீர் சேமிப்பு திட்டத்தால் சிக்கராயபுரம் கல்குவாரி நிரம்பியது; குடிநீராக விநியோகிக்க திட்டம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

சென்னை: பூந்தமல்லி, மாங்காடு சுற்றுவட்டார பகுதியில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை புதிய கால்வாய் அமைத்து, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் சேமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால், தற்போது, இந்த புதிய நீர்த்தேக்கம் நிரம்பி காணப்படுகிறது. இந்த நீரை சுத்திகரித்து சென்னைக்கு குடிநீராக வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மிதமான மழை பெய்தாலே சாலைகளில் மழைநீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். எனவே, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, உடனுக்குடன் வெளியேற்ற நிரந்த தீர்வு காண வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்கும் வகையில் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு, எங்கெல்லாம் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது என்பதை கண்டறிந்து, அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் மழைநீர் வடிகால்கள் முறையாக தூர்வாராத காரணத்தால் தான் கடந்த ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வாரி பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், சமீபத்தில் பெய்த மழைநீர் எந்த தடையும் இன்றி விரைந்து வெளியேறியது.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பூந்தமல்லி நகராட்சி, மலையம்பாக்கம், நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் அதிக அளவில் மாங்காட்டில் தேங்குவதால் பாதிப்பு அதிகமானது கண்டறியப்பட்டது.

சென்னையை போன்று புறநகர் பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ள அரசு திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகளில் மழைநீர் தேங்குவை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை வழியாக சிக்கராயபுரம் கல்குவாரிக்கு மழை நீரை திருப்புவதற்காக 6 கிலோ மீட்டர் நீளத்தில் ராட்சத கால்வாய் அமைக்கும் பணி ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 முதல் 14 அடி அகலமும், 2 முதல் மூன்றரை அடி ஆழத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், செங்கல்பட்டு மண்டல இயக்குநர் சசிகலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பூந்தமல்லி நகராட்சி கமிஷ்னர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பூந்தமல்லி, நசரத்பேட்டை, மாங்காடு பகுதிகளில் தேங்கும் மழைநீர் சீராக சிக்கராயபுரம் கல்குவாரிக்கு செல்லும் வகையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். இதனிடையே, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு ஆகியோர் சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையை ஆய்வு செய்து, அங்கு மழைநீர் சேமிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்தனர்.

அப்போது, சிக்கராயபுரம் கல்குவாரி 420 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை மழைநீர் சேமிக்கும் புதிய நீர்த்தேக்கமாக மாற்றப்படும். கோடை காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வற்றிப்போனால் சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து, அதை குடிநீர் பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு செய்து, சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படும், என தெரிவித்ததனர்.

இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக 3 நாட்களாக பெய்த கன மழையால் பூந்தமல்லி, நசரத்பேட்டை, மாங்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தேங்கிய நீர், புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் சேமிக்கப்பட்டது.

தொடர் நீர்வரத்து காரணமாக தற்போது சிக்கராயபுரம் புதிய நீர்த்தேக்கம் முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. வரும் கோடை காலத்தில் தேவை இருப்பில் இந்த தண்ணீரை சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்கப்படும், என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories: